வியாழன், 14 மார்ச், 2019


கதிர்காமக் காட்சிகள் –திருவிழாக் காட்சிகள்  ---கி.வா.ஜகன்னாதன்
கதிர்காமத் திருக் கோயிலில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெளிவாகத் தெரியாது. ஒரு காலத்தில் இந்தக் கோயிலை  பூசிக்கும் தொண்டை ஹிந்துக்களே செய்து வந்ததாகச் சிலர் கூறுகிறார்கள். சிதம்பர ரஹசியம் போலக் கதிர்காம ரகசியமும் இருக்கிறது.                   
   உள்ளே மிக உயர்ந்த மாணிக்கத்தினாலாகிய முருகன் திருவுருவம் இருக்கிறதென்று சிலர் கூறுகின்றனர். தக்ஷிண கைலாச புராணம் என்னும் நூல் இந்தத் தலத்தைப் பற்றி வருணிக்கும் போது, இந்திர  நீல மணியினால் செய்த சிங்காதனத்தில் முருகன் எழுந்தருளியிருக்கிறான் என்று தெரிவிக்கிறது. அருணகிரினாதர் திருப்புகழில்                                       “கனக மாணிக்க வடிவனே  மிக்க                                                        கதிர காமத்தில் உறைவோனே “   என்று பாடுகிறார்                                  
   இவற்றை யெல்லாம் பார்க்கும் போது இங்கே மிக விலை உயர்ந்த பொருளால் ஆகிய முருகனுடைய திருவுருவம் இருந்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது தமிழ் நாட்டில் பல  பழைய தலங்களில் இன்னும்விலையுயர்ந்த மணிகளால் ஆகிய லிங்கங்களையும் ஆபரணங்களையும் காணலாம். அவ்வண்ணமே இங்கும் முருகனுடைய திருவுருவம் மிக்க விலையுயர்ந்த மாணிக்கத்தால் அமைந்திருக்க நியாயம் உண்டு.
  மாணிக்க வேல் இருக்கிறது என்றும் அதனையே பெட்டியில் வைத்திருக்கிறார்கள் என்றும் ,யந்திரம்  இருக்கிறதென்றும் அந்த யந்திரத்தகடே பெட்டியில் இருக்கிறதென்றும், அதனுடைய சக்தியால் தான் இத்தலத்துக்கு மகிமை ஏற்பட்டிருக்கிறதென்றும் கூறுபவர்கள் உண்டு.
  காட்டுக்கு நடுவே இத்தலம் இருந்தலினால் பக்தி உள்ளவர்கள் கூட்டம் கூட்டமாகவே வந்து தரிசித்துப் போயினர். மற்றச் சமயத்தினர்கள் இங்கே விலயுயர்ந்த பொருட்கள் இருக்கிறதென்றெண்ணி அதைக்  கொள்ளையடித்து எடுத்துச் செல்லவும் துணிந்தார்களாம். சில போர்த்துக்கீசியர்கள் இந்தக் கோயிலுக்குக் கொள்ளையடிப்பதற்காக வந்த போது , அவர்களுக்கு வழிகாட்டி வந்தவர்களூக்குப் அபித்தியம் பிடித்துவிட்டதாம். இதை ஒரு போர்த்துகீசியரே எழுதியிருக்கிறார்.
  காட்டுக் கிராமம் “ என்ற நாவலை லியனார்ட் வுல்ஃப் என்றவர் எழுதியிருக்கிறார்.  இலங்கையில் காட்டினிடையே  வாழ்ந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை அது. அதனிடையே அந்தக் குடும்பத்தினர் கதிர்காமத்துக்கு யாத்திரை சென்றதாக  ஒரு பகுதி வருகிறது. கதிர்காமத்தைப் பற்றித் தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் இணைத்து அந்தப் பகுதியை ஆசிரியர் எழுதியிருக்க வேண்டுமென்று தோற்றுகிறது. அந்தப் பகுதியில்சில இடங்கள் வருமாறு.  -------
   “ அடுத்த நாள் காலையில் அவர்கள் மகா பட்டணத்தை விட்டுச் செல்லவேண்டியிருந்தது.  மறுபடியும் காட்டினிடையே பிரயாணம் செய்து துன்புற நேர்ந்தது. இரண்டு  நாட்கள் முள் நிறைந்த காட்டினூடே நடக்க வேண்டியிருந்தது. , இடையில் வெயிலுக்கு ஒதுங்க நிழலே கிடையாது. வரவர வழி கல்லும் பாறையும் நிறைந்ததாக இருந்தது.அங்கங்கே புதர்களும் அவற்றினிடையே குண்டுக் கற்களும் இருந்தன. மரங்களுக்கிடையே உயர்ந்து நின்ற பாறைகளும் இருந்தன. முதல் நாள் பிற்பகலில் பேரகமக் குன்றத்தை நெடுந்தூரத்திலிருந்து கண்டார்கள். கோயிலுக்கு மேலே மூன்று சிகரங்களை  உடையதாக அது நின்றது அடுத்த நாள் மாலை அவர்கள் க்குன்ரத்தைச் சார்ந்த நாட்டை அடைந்தார்கள் அது அடிவாரத்திலிருந்து குன்றின் உச்சி வரையில் படர்ந்திருந்தது.
 “ மறுபடியும் திடீரென்று காடில்லாத இடம் வந்தது. ஓர் ஆற்றின் கரையை அடைந்தார்கள் கரைகளில் பெரிய மருத மரங்களும்அடர்ந்திருந்தன. வெயி காலமாகையால் ஆற்றின் நடுவில் கொஞ்சந்தான் நீர் ஓடிக் கொண்டிருந்தது . இரு பக்கங்களிலும் மணற் பரப்பு இருந்தது. ஆற்றில் அங்கங்கே யாத்திரிகர்கள் தங்கள் உடலழுக்கையும் உள்ளத்தழுக்கையும் போக்கிக் கொள்ள நீராடிக் கொண்டிருந்தார்கள். இவர்களும் அவர்களைப் பார்த்து நீராடினார்கள். வெள்ளாடை உடுத்துக் கொண்டு ஆற்றுக்கு அக்கரையை அடைந்து ஊருக்குள் போனார்கள்.
 ‘ நீளமும் அகலமுமான ஒரு தெருவில் அவர்கள் புகுந்தார்கள். தெருவின் இரு புறங்களிலும் வீடுகளூம் மடங்களும் இருந்தன. மடங்கள் யாத்திரிகர்கள் வந்து தங்க வசதியானவை. தெரு முழுவதும் அடியார்கள் நிறைந்திருந்தனர். சிலர் சும்மா நின்று கொண்டும், சிலர் கடைகளில் பண்டம் வாங்கிக்கொண்டும் , சிலர் கோயிலுக்குப் போய்க் கொண்டும் இருந்தார்கள். கோயிலிலிருந்து ஸ்வாமி வெளீயில் எழுந்தருள வேண்டிய சமயம் அது. அங்கே திருவிழா பதினான்கு தினங்கள் நடக்கும். ஒவ்வொரு நாளும் கடவுள் திரு வீதியில் எழுந்தருளுவார். பௌர்ணமியன்று உற்சவத்தின் கடைசி நாள். அன்று மிகவும் விசேஷமாக இறைவன் பவனி நடைபெறும். அதற்கு மறுநாள் கோயில்பூஜை செய்யும் கப்புராளை ஆற்றுக்குச் சென்று நீராடுவார். அப்போது அடியார்களெல்லாம் அவருடன் சென்று ஸ்னானம் செய்வார்கள். ஆற்றில் பொற் கத்தியினால் நீரைக் கீறுவார் பூசாரி.
  தெருவின் இரு முனையிலும் கோயில்கள் இருந்தன. வட முனையில் இருந்த கோயில் பேரகமத்தெய்யோ ( கதிர்காம முருகன் ) வினுடையது. தேவாலயம் சிறியது. அதன் ஒரு பக்கத்தில் விமானம் இருந்தது. அதன் மேல் பல தெய்வங்களின் திருவுருவங்கள் அமைந்திருந்தன. இந்துக் கோயில்களில் இப்படிக் கோபுரமும் அதில் சிற்ப உருவங்களும் இருக்கும். கோயிலைச் சுற்றிப் பெரிய முற்றம் இருந்தது.அதைச் சூழச் செங்கல்லால் அமைந்த திருமதில் இருந்தது. மதிலுக்குப் புறம்பே கீழ்த் திசையில் மற்றொரு சிறிய கோயில் இருந்தது. அது கடவுள் திருமணம் செய்து கொண்ட தேவியின் கோயில் . ( தேவயானை கோயில்) வீதியின் தென் கோடியில் மற்றொரு கோயில் உண்டு. அது சதுரமான கோயில் குப்பை கூளம் நிறைந்ததாக இருந்தது.அதற்கு முற்றமோ மதிலோ இல்லை.அதைச் சுற்றித் திண்ணை இருந்தது. அதில் கண்ட கண்ட சாமான்களெல்லாம் கிடந்தன. யாத்திரிகர்கள் அங்கே தூங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கோயிலுக்கு ஒரே ஒரு வாசல். அதில் ஒரு திரை கட்டியிருந்தார்கள். அந்தத் திரையில் கடவுள் திருவுருவம் இருந்தது. கப்புராளையரைத் தவிர வேறு யாரும் திரையைத் தாண்டி உள்ளே போக முடியாது. அந்தக் கோயில் கடவுளுடைய காதற்  கிழத்தியினுடையது. ( வள்ளீயம்மை திருக்கோயில் )
   “ இங்கே காட்டினிடையே வாழும் தமிழ்க் கடவுள் யார்?தமிழர்கள் இந்தப் பெரிய கடவுளைக் கந்தசாமி என்று வழங்கினார்கள். இங்கே வாழும் புத்தர்கள் அக்கடவுளை அறிந்து கொண்டவர்களாகச் சொல்கிறார்கள். மரங்களிலும் , காடுகளிலும் உள்ள பேய் பிசாசுகளை அவர்கள் அறிவார்கள். அவைகளோடு அந்தக் கடவுளும் இருக்கிறாரம். ஒரு காலத்தில் முன்னே சொன்ன பெரிய குன்றத்திலுள்ள மூன்று சிகரங்களில் நடுச் சிகரத்தில் இந்தக் கடவுள் எழுந்தருளி யிருந்தாராம். கடலளவும் பரந்து கிடக்கும் காட்டையும் , மலையையும் ஆட்சி புரிந்து வந்தார். அதனால் தான் உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் அந்தச் சிகரத்தில் நெருப்புச் ஜோதி விடுகிறதாம். ஒருநாள் குன்றத்தின் மேல் அப்பெருமான் வீற்றிருந்து, கீழே ஓடிய ஆற்றையும், மரங்களையும் பார்த்தார். ஆற்றுக்கு அக்கரையில் உள்ள சம வெளீயில் சென்று தங்கவேண்டுமென்ற திருவுள்ளம் பூண்டார்.அந்தக் காலத்திலும் அவர் தமிழ்க் கடவுளாக இருந்தார். ஆகவே அந்தப் பக்கம் வந்த தமிழர்களை அழைத்து தம்மை ஆற்றின் அக்கரைக்கு எடுத்துச் செல்லும்படி பணித்தார். தமிழர்கள் “ எம்பெருமானே, நாங்களெல்லாம் ஏழைகள் நெடுந்தூரம் காடும் மேடும் கடந்து கடற்கரையில் உள்ள உப்பங்கழியில் உப்பெடுக்கப் போகிறோம். இப்போது இங்கே தங்கினால் மழை வந்து உப்பைக் கரைத்துவிடும். நாங்கள் வந்த காரியம் வீணாகிப் போகும்.ஆகையால் எங்கள் காரியத்தை முடித்துக் கொண்டு திரும்புகாலில் தேவரீரை எடுத்துச் சென்று ஆற்றுக்கு அக்கரையில் பிரதிஷ்டை செய்வோம்” என்றார்கள். இப்படிச் சொல்லிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். அவர்கள் தம் ஏவலைப் புறக்கணித்ததனால் கடவுளுக்குக் கோபம்மூண்டது. சிறிது நேரம் கழித்து சிங்களவர்கள் சிலர் ஒரு கூட்டமாக வந்தார்கள். அவர்களும் உப்பங்கழியில் உப்பெடுக்கத்தான் போய்க் கொண்டிருந்தார்கள். கடவுள் அவர்களை அழைத்துத் தம்மை ஆற்றின் அக்கரைக்கு எடுத்துச் செல்லும்படி சொன்னார். அவர்கள் குன்றத்தின் மேல் ஏறிக் கடவுளை எடுத்துக் கொண்டு கீழிறங்கி ஆற்றைக் கடந்து சென்று அக்கரையில் மரங்களின் கீழ், இப்போது கோயில் உள்ள இடத்தில் வைத்தார்கள்.அப்போது கடவுள் இனிமேல் தம்மைத் தமிழர்கள் பூஜை செய்யக் கூடாதென்றும், சிங்களவர்களே செய்ய வேண்டுமென்றும் கட்டளையிட்டார். அதனால்தான் இந்தக் கடவுள் தமிழ்த் தெய்வமாக இருந்தாலும், கோயில் இந்துக்கோயிலாக இருந்தாலும் இங்குள்ள பூசகர்கள் பௌத்தர்களும் சிங்களவர்களுமாக இருக்கிறார்கள்.
  “ ஆகவே இந்தக் கடவுள் காட்டுத் தெய்வம். பெரிய பூத கண நாதர் , தக்க முறையில் அணுகி வழி பட்டால் அருள் செய்வார்.கோயிலைச் சுற்றியுள்ள அமானுஷ்யமான காடு முழுவதும் இவர் ஆணை பரந்திருக்கிறது. பக்தர்கள் இந்தக் கடவுளின் மேல் ஆணையிடுவார்கள். பொய்யாக ஆணையிட்டால் கடவுள் அவர்களைத் தண்டிப்பார். நோயாளிகளும் மலடிகளும் பேயால் பிடிக்கப் பட்டவர்களும் இங்கே பிரார்த்தனை செய்வார்கள்.
    
 
“ அடியார்கள் உற்சவ காலத்தில் கூட்டம் கூட்டமாக வந்து இந்தக் கடவுளை வழிபடுவார்கள். கடவுள் ஒரு மானைக் காதலித்துத் தம்  காதலியாகக்கொண்டார். தெருவின் தென் கோடியில் உள்ள கோயிலில் அந்தக் காதலியை இருக்கச் செய்தார். உற்சவத்தின் பதினாங்கு நாட்களிலும் ராத்திரியில் கப்புராளைகள் கோயிலுக்குச் சென்று ஒரு பெரிய கறுப்பு ஆடையால் கடவுளை மூடி எடுத்து வருவார்கள். அவரைப் பார்க்கக் கூடாது. யானையின் மேல் கடவுளை வைப்பார்கள். அடியார்கள் ஆண்டவர் பேர் சொல்லி அழைப்பார்கள். தங்கள் தலை மேல் கற்பூர தீபம் நிறைந்த பாத்திரங்களை ஏந்திச் செல்வார்கள். ஊர்வலம் வள்ளியம்மை திருக் கோயிலை நோக்கிச் செல்லும். அங்கே கப்புராளைகள் தங்கள் கண்களைக் கட்டிக் கொண்டு கடவுளை யானை மீதிருந்து இறக்கி, மறைத்த படியே வள்ளியம்மை கோயிலுக்குள் கொண்டு போவார்கள். அடியார்கள் இறைவர் திருநாம கோஷம் செய்வார்கள். பெண்கள் கப்புராளைமாரின் காலில் விழுந்து வணங்குவார்கள். இப்படிச் செய்தால் பிள்ளை யில்லாதவர்களூக்குக் குழந்தை பிறக்குமென்று நம்பினார்கள். கப்புராளைமார் கடவுளை வள்ளீயினிடம் எடுத்துச் சென்று வத்துவிட்டுப் போவார்கள். முரசுகள் முழங்கவும், மணிகள் ஒலிக்கவும் எங்கும் விளக்குகளின் சுடர்கள் ஒளிரவும் அடியார்கள் பாடி ஆடிக் களிப்பார்கள். கீழே விழுந்து வணங்குவார்கள். மறுபடியும் கப்புராளைமார் கண்ணைக் கட்டிக் கொண்டு வள்ளியம்மை கோயியிலுக்குள்ளே சென்று , கடவுளை மூடிய படியே எடுத்து வந்து யானையின்  மேல் வைப்பார்கள். மறுபடியும் தம்முடைய கோயிலை நோக்கிக் கடவுள் எழுந்தருளுவார். அடியார்கள் பின் தொடருவார்கள். “
  இவ்வாறு அந்த ஆங்கிலேயர்கள் கதிர் காமத்தில் நடைபெறும் திருவிழாவை வருணித்திருக்கிறார்.
   பல காலமாகவே கதிர்காமம் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்திருக்கிறது என்பதும் , மக்கள் இங்கே வந்து வழிபட்டுத் தம் குறை தீர்ந்தார்கள் என்பதும் இந்த வருணையினால் உணர வேண்டிய செய்தியாகும்.
   மாணிக்கத் திருவுருவ முடையவன் இங்கே எழுந்தருளிய முருகன் என்பது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், ஒரு காலத்தில் யாவரும் கண்டு வழிபடும் அற்புதத் திருவுருவம் ஒன்றை உடையவனாகி  முருகன் இங்கே எழுந்தருளியிருந்தான் என்று நம்ப இடமுண்டு.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------