வெள்ளி, 5 ஏப்ரல், 2019


 மனை விளக்கு ---   பாக ம் 2
இப்போது அவனது உள்ளத்தில் சிறிது சபலம் தட்டியது.மறுபடியும் வெளிநாடு சென்று சிலகாலம் தங்கி ஏதேனும் தொழில் செய்து பணம் சம்பாதித்து வரலாமா என்ற எண்ணம் தோன்றியது.பணம் எவ்வளவு இருந்தால்தான் என்ன?செலவழிக்கவா வழி இல்லை? இன்னும் பணம் சேர்த்து வந்தால் . இன்னும் இன்பம் உண்டாவதற்கு ஏற்ற வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாமே என்ற விருப்பம் அவனுடைய நெஞ்சிடையே முளைத்தது. 
‘அடபாவி நெஞ்சே! உனக்கு இன்னுமா சபலம்? முன்னாலே பட்ட துன்பங்களெல்லாம் அதற்குள் நீ மறந்து போனாயே?  பொருளைச் சம்பாதிக்க மறுபடியும்  போகலாம் என்று எண்ணுகிறாயே ! போனதடவை படாத பாடு பட்டோம் ; அதை எண்ணிப்பார்.’ என்று அவன் நினைக்கிறான்.நெஞ்சுதான் நினைக்கிறது. ஆனாலும் அதை வேறாக வைத்துப் பேசுவது போல்  அந்த நினைப்பு ஓடுகிறது.
“ நாம் போனோமே, அந்த வழி அழகிய சாலையும் , சோலையுமாகவா இருந்தது? பூங்காவும் அடர்ந்த மரமும் நிழல்தர , போகும் இடங்களிலெல்லாம் மக்கள் உபசாரம் செய்ய , அழகிய காட்சிகளைக் கண்டு களித்துச் சென்றாலும் குற்றம் இல்லை.அந்தக் கண்ணாறாவிக் காட்சியை என்னென்று சொல்வது?
அவன் இப்போது இருந்த இன்பச் சூழலிலே அன்று அப்போது பட்ட பாட்டை நினைவுக்குக் கொண்டுவருகிறான்.
போன வழியெல்லாம் மரம் கருகிவளம் சுருங்கிய பாலை நிலம் அது.எங்கேயோ ஒரு மூலையில் வேப்பமரம் ஒன்று.வேறு எங்கோ ஓர் இடத்தில் நெல்லி மரம் ஒன்று.  பார்த்தாலே  கண் எரிச்சலை உண்டாக்கும்  அந்தச் சுரத்தில் நிற்கும் அந்த வேப்ப மரமாவது தழை அடர்ந்து வளர்ந்திருக்கிறதா?என்றைக்கோ தண்ணீரைக் கண்ட அது ஏதோ புண்ணியத்துக்கு உயிரை வைத்துக் கொண்டிருக்கிறது.இலையே தெரியாமல் கிளை தெரிவதனால் அது நீளமாகத் தோன்றுகிறது.வளம் இல்லாமல் சதைப் பிடிப்பின்றிக் குச்சி குச்சியாக இருக்கும் கையும் , காலும் உடம்பும் நீளமாகத் தோன்றுவது இல்லையா? வானத்திலே அந்தக் கிளைகள் நிமிர்ந்து நிற்கின்றன.பரந்து படர்ந்து தழைத்து நிழல் தர அங்கே நீர் வளந்தான் இல்லையே! மேலெல்லாம் ஆகாசம். அதை முட்டுவது போல நிற்கிற  வான் பொர நெடுஞ்சினைகளை உடையது அந்த வேப்ப மரம்.
அதன் அடிமரம் எப்படி இருக்கிறது?பொறுக்குத் தட்டின புண்ணைப்போலே  பொரிந்து போய்க் கிடக்கிறது,.பொரிந்த அரையுடைய அந்த மரத்தின் வான் பொரு நெடுஞ் சினையின் மேல் ஒரு பறவை இருக்கிறது.அது குயிலும் அல்ல;கிளியும் அல்ல . குயிலுக்கும் கிளிக்கும் அங்கே பழமும் தளிரும் ஏது?பருந்தும் கழுகுமே அந்தப் பாலைவனத்தின் பறவைகள். வழிப்பறி செ ய்யும் கள்வர்கள்  பிரயாணிகளை மடக்கிக் கொலை செய்வதும் உண்டு.அந்தப் பிணங்களைக் கொத்தி விருந்துண்ணும் பெருமையுடைய பறவைகளே  அந்த நிலத்தில் வாழ முடியும் . பருந்தும் கழுகும் பிணம் தின்னும் ஜாதியல்லவா?
பாலை நிலத்துப் பிரஜையாகிய பருந்து ஒன்று வேப்ப மரத்தின் மேல் இருக்கிறது. அதற்கு அங்கே என்ன வேலை? அது முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்க வந்திருக்கிறது ப்ரசவ வேதனையோடு அந்த மரத்துக் கிளையில் தங்கியிருக்கிறது.அந்த வேம்பின் மேலே  ஈனும் பருந்து வருந்தி உறையும் காட்சியைத்தான் காணலாம் .பிணம் தின்னும் பரம்பரை வளர இடம் கொடுக்கிறது. அந்த வேப்ப மரம்!
வேப்ப மரத்தின் கீழே என்ன இருக்கிறது? அடர்ந்து செறிந்திருந்தால் நல்ல நிழல் இருக்கும் .இந்த மரத்திலோ பேருக்கு இலைகள் இருக்கின்றனவே ஒழிய அவை தள தளவென்று தழைத்திருக்கவில்லை. அந்த இலைகளும் உருவம் சுருங்கிய சிறிய சிறிய இலைகள்.மரத்தின் கீழே நிழல் படர்ந்தா இருக்கும்?புள்ளி புள்ளியாக நிழல் இருக்கிறது பொரித்த அரையும் வானைப்பொரும் நெஞ்சினையும் ஈனும் பருத்து உயவும் ( வருந்தும்) நிலையும் உடைய அந்தப் பாலை நில வேப்ப மரத்தின் கீழே புள்ளி நிழல்தான் இருக்கிறது.
            அட! அந்த நிழலுக்குக் கூட வெறித்துப் போனவர்கள் அங்கே இருக்கிறார்களே! எங்கே பார்த்தாலும் பதை பதைக்கும் வெயில்  காயும்போது அது புள்ளி நிழ்லாக இருந்தால் என்ன ? நிழல் என்பதே அரிய பொருளாக இருக்கும் அந்தப் பிரதேசத்தில் எவ்வளவு குறைவாக இருந்தாலும் நிழல் நிழல்தானே?
            வேப்ப மரத்தின் கீழே புள்ளியிட்டாற்போன்ற நிழலில் குழந்தைகள் விளையாடுகிறார்கள்.பாலை நிலத்திலும் மக்கள் இருக்கிறார்கள்.அவர்களுடைய குழந்தைகள் அவர்கள். பாலை நிலமாயிற்றே, நீர் வளம், நிலவளம் இல்லாத அந்த இடத்தில் என்ன விளையும் ? எதைப் பயிர் செய்ய முடியும் ? அங்கே உள்ள மனிதர்கள் எப்படிப் பிழைக்கிறார்கள்?
அவர்களும் உழவுத் தொழில் செய்பவர்களே; நிலத்தை ஏரால் உழுபவர்கள் அல்ல. வில்லும் அம்பும்  கொண்டு , வழிப்போகும் மக்களைக் கொன்று அவர்களிடம் உள்ள பொருளைப் பறித்து அதைக் கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் தங்கள் வில்லையே ஏராகக் கொண்டு வழிப்பறியாகிய விவசாயத்தைச் செய்கிறவர்கள்.வில்லேருழவர் கொலைத் தொழிலும் கொள்ளையிடுவதுமே அவர்களுடைய உத்தியோகம் .அவர்களுக்கும் குழந்தை குட்டிகள் உண்டு.அவர்களுடைய குழந்தைகள் வேப்ப மரத்தடியில் விளியயாடுகிறார்கள்.அவர்களுக்குப் படிப்போ நல்ல பழக்கங்களோ இல்லை.கல்லாச் சிறார். அவர்கள் வட்டு ஆடுகிறார்கள்.தாயக்கட்டம் ஆடுவது போன்ற ஒரு விளையாட்டைஆடுகிறார்கள்.பாலைவனத்தில் எங்கோ தனியே வளர்ந்திருக்கும் நெல்லிக்காயைப் பொறுக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.அதையே உருட்டி உருட்டி விளையாடுகிறார்கள்.அவர் கோடு கிழித்த இடம் பொன்னை உரைக்கும் கல்லைப் போலக் கறுப்பாகக் கரடு முரடாக இருக்கிறது.வில்லேர் உழவர்களுடைய கல்லாச் சிறார் வட்டு ஆடும் அரங்காக அந்த மரத்தின் அடி இருக்கிறது.
இடம் நினைத்தாலே அச்சம் தருவதாக இல்லையா? ஒரு பொருளாவது உள்ளத்திலே குளிர்ச்சியை, அழகைத் தருவதாக இருக்கக் கூடாதா? கைப்புக்கு இடமான வேம்பு ; அது கூட இலை சிறுத்து அடிமரம் பொரிந்து நிற்கிறது.அதன் மேலே பிணத்தை விருந்தாக அருந்தும் பருந்து. கீழே வில்லேருழவரின் கல்லாச் சிறார்.
            வழிப்பறி செய்கின்ற வில்லேழுவர்கள் சேர்ந்து வாழும் சின்னச் சின்ன ஊர்கள் வழி முழுவதும்  இருக்கின்றன. வெப்பம் நிறைந்த முற்றங்களையுடைய ஊர்கள்.அவை புறத்திலே மாத்திரம் வெப்பம் அல்ல. உள்ளத்தே கூட வெப்பம் கொண்ட மக்கள் வாழும் இடங்கள் அவை.சுடுகாட்டுக்கும் அவற்றிற்கும் வேறுபாடு இல்லை.
( தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக