செவ்வாய், 9 ஏப்ரல், 2019


மனை விளக்கு – பகுதி 4
  கி.வா.ஜ
பழங்கதை அவனது உள்ளத்தே ஓடியது.” நெஞ்சே! அன்று நான் பாலை நிலத்தில் நடுவழியில் என் உரனெல்லாம் மாயும்படி வந்த மாலைக் காலத்தில் வினை முடித்தாலன்ன இனியோனாகிய காதலி மனைக்கு மாட்சிமை தரும் சுடரொடு நின்று படரும்பொழுது  இது என்று  நினைத்து மயங்கினேனே!  மறுபடியும் அந்த அவஸ்தைக்கு  ஆளாக வேண்டுமா? பட்ட பின்பும் துன்பத்தை வலிய மேற்கொள்வார் உண்டோ? நான் போக மாட்டேன்” என்று தன் நெஞ்சோடு அந்தத் தலைவன்  பேசுகிறான்.
ஈன்பருந்து உயவும் வான் பொரு நெடுஞ்சினைப்
பொரி அரை வேம்பின் பிள்ளி நீழல்
சுட்டனை அன்ன  வட்டரங்கு இழைத்துக்
கல்லாச் சிறாஅர்  நெல்லிவட்டு ஆடும்
வில்லேர் உழவர் வெம்முனைச் சிறூர்ச்
சுரன் முதல் வந்த உரன்மாய் மாலை
உள்ளினென்  அல்லனோ யானே,’ உள்ளிய
வினைமுடித்  தன்ன  இனியோள்
மனை மாண் சுடரொடு படர்பொழுது ‘ எனவே?
நெஞ்சே ,முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பருந்து இருந்து வருந்தும் , வானை முட்டும் நீண்ட கிளைகளையும் , பொரிந்த அடியையும் உடைய வேப்ப மரத்தின், புள்ளி வைத்தாற் போன்ற செறிவில்லாத நிழலிலே பொன்னை உரைக்கும் கல்லைப் போன்ற வட்டாடுதற்குரிய இடத்தை அமைத்து , கல்லாச் சிறுவர்கள் நெல்லிக்காயாகிய வட்டுகளை வைத்துக் கொண்டு விளையாடுவதும் வழிப்போவோரைக் கொலை செய்யும் வில்லையே  ஏரகக் கொண்டு முயற்சி செய்யும் ஆறலை கள்வர்  வாழ்கின்ற வெம்மையையுடைய  முன்னிடங்களைப் பெற்ற சிறிய ஊர்களை உடையதுமாகிய பாலை நில வழியில் வந்த என் மன வலிமையை அழியச் செய்கின்ற மாலைக்காலத்தில் , நான் நினைத்துக் கவலையுற்றேன் அல்லவா? ‘”நினைத்த காரியத்தை நிறைவேற்றினால் வரும் இனிமையைப் போன்ற இனிமையையுடைய நம் காதலி நம் மனைக்கு அழகான விளக்கோடு நின்று கவலையோடு நம்மை நினைக்கும்பொழுது இது என்று?
மாலையில், எனவே , யான் உன்னினென் அல்லனோ? “ என்று வாக்கியத்தை முடித்துக் கொள்க.
ஈனுதல்—கருவுயிர்த்தல், உயவும் –வருந்தும், சினை—கிளி, பொரி அரை –பொரிந்த அடி மரம், பொறுக்குத் தட்டிப்போன அடி மரம், புள்ளி நிழல்—புள்ளி புள்ளியாக இருக்கும் நிழல், கட்டளை—பொன்னைஉரைக்கும் கல், வட்டு அரங்கு—சூது காய்களை ஆடும் இடம் , குண்டுகளை ஆடும் இடம் , வில் ஏர் உழவர்—வில்லையே ஊராகவுடைய உழவராகிய பாலை நிலமறவர்,முனை—முன்னிடம், சீறூர்—சிறு ஊர், சுரன் முதல்—பாலை நில வழியிடத்தில் ; முதல் . ஏழாம் வேற்றுமை உருபு, உரன் --- வலிமை. இங்கே மனத்திண்மை, உள்ளினென்—நினைத்தேன் வினை முடித்தன்ன---காரியத்தை நிறைவேற்றினாற் போன்ற , மனை மாண்—மனைக்கு மாட்சி தருகின்ற , சுடர்—விளக்கு, படர்—நினைக்கும்
‘முன் ஒரு காலத்துப் பொருள் வயிற் பிரிந்த தலை மகன் பின்னும் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது’ என்பது இந்தப் பாடலின் துறை.முன்பு ஒருதடவை பொருள் ஈட்டுவதற்காகத் தன் காதலியைப் பிரிந்து சென்று மீண்ட தலை மகன் , மறுபடியும் பொருள் தேடவேண்டுமென்று எண்ணிய நெஞ்சுக்குச் சொன்னது’ என்பது அதற்குப் பொருள். மணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தும் கற்புக் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி இது.
இதனைபாடியவர் இளங்கீரனார்.என்னும் புலவர் . இது நற்றிணையில் மூன்றாவது பாட்டு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக