திங்கள், 22 மார்ச், 2021

 

குண்டோதரனுக்கு   அன்னமிட்டது    (  கி.வா.ஜ )

 

அங்கயற்கண்ணி  யம்மையின்   திருமணத்திற்கு   வந்தவர்களுக்கெல்லாம்  அறுசுவை   உண்டி  வழங்கினர் . யாவரும்  வயிறார உண்டு   மகிழ்ந்தனர். அப்போது   சமயர்காரர்கள்    மீனாட்சியிடம்  வந்து , “அன்னையே   நாங்கள்   சமைத்த விருந்துணவில்   ஆயிரத்தில்  ஒரு  பகுதிகூடச்   செலவாகவில்லையே ?  இன்னும்   மலை   மலையாக  எல்லாம்  மிஞ்சியிருக்கின்றன.    என்று  கூறினார்கள்.

  அதைக்   கேட்ட  அன்னை   தன்  கணவரை  அடைந்து   பணிந்து ஒதுங்கி   நின்று   மெல்லக்   கூறலானாள். “   சுவமி !, தேவரீர்   முப்பத்து  முக்கோடி   கணங்களுடனும் எழுந்தருள்வீர்கள்     என்ற  எண்ணத்தால்  விருந்து   சமைத்திருக்கிறார்கள். திருமணத்துக்கு   வந்தவர்கள்   யாவரும்   உண்ட பிறகும்   இமய  மலையைப்  போலச்   சோறும்  ,  மற்ற  மலைகளைப்  போல   ஏனைய   உணவு   வகைகளும்     மிஞ்சி  இருக்கின்றன. ”  என்றார்,

   எம்பெருமான்  சிறிதே   புன்னகை  பூத்தான் . பிறகு ,  “ முடியுடை   மூவேந்தர்களினும்   சிறந்த  பாண்டியனுடைய    மகளாகிய   உனக்குக்   கிடைப்பதற்கு   அரிய  பொருள்  என்ன இருக்கிறது ? தேவலோகத்துக்   கற்பகமும்  உன்னுடைய  ஏவலுக்கு   அடங்கி   இங்கே   இருக்கிறது . நின்   செல்வச்   சிறப்பை   நாம் அறியும்  பொருட்டு இவ்வளவு   மிகுதியான  உணவைச்   சமைக்கச்   செய்தனை   போலும் !. இன்னும்   உண்ணுவதற்கு உரிய   பசியுடையவராக  யாரும்  என்னுடன்  வந்த  கணங்களில்   இல்லை . இதற்கு  என்ன  செய்வது ? ”   என்றான் .

  இப்படிச்  சொன்னவன்  அருகில்   தனக்குக்  குடை  பிடித்துக்   கொண்டிருந்த பூத  கணத்தைச்   சேர்ந்தவனாகிய  குண்டோதரன்   வயிற்றில்   பெருந்தீயைப்  புகச்  செய்தான் . அதனால்  மிகவும்  வருந்திய  அவன் , “ ஐயனே   எனக்குப்  பசிக்கிறது . ” என்று  சொன்னான் .

    இறைவன்   உடனே   மீனாட்சியைப்   பார்த்து , “  இவனுக்குப்   பசிக்கிறதாம் , இவனுக்கு   ஒருபிடி  சோறு   போடுங்கள். பிறகு    செய்வதை   அப்பால்   சொல்கிறோம்”      என்று   சொல்ல ,பிராட்டி குண்டோதரனை   அழைத்துக்  கொண்டு   செல்லும்படி     ஏவலரைப்  பணித்தாள். அவன்  கடும் பசியுடன்   நடை   தளர்ந்து , கண்  புகைந்து  வாய்   புலர   அவர்களுடன் சென்றான். ஏவலாளர்கள்   அவனைக்  கொண்டு போய்ச்   சோற்று   மலையின்  முன்  விட்டார்கள். அங்கே   அவன்  உட்கார்ந்ததுதான் , அடுத்த  கணத்தில்   அங்கே   இருந்த  அவ்வளவு   பெரிய  அன்னக்   குவியலும்   இருந்த  இடம்  தெரியாமல்  போய்விட்டது.

 

 

இதைக்   கண்டு   யாவரும்   ஆச்சரியப்பட்டுப்   போயினர். மகளிர்   அஞ்சி   ஓடினர். குண்டோதரன்  சோற்றை   உண்டதோடு   அங்குள்ள  கறி,  கூட்டு , வறுவல்  ,  குழம்பு   எல்லாவற்றையும்  அப்படியப்படியே   எடுத்து  வாயில்   கவிழ்த்துக்   கொண்டான். பால்,   தயிர்  , நெய்   முதலியவற்றையும்   எடுத்து   விழுங்கினான் . அப்பொழுதும்    அவன் பசி   தீரவில்லை . அங்கே   குவித்திருந்த  பலவகையான பழங்களை   வாரி  உண்டான் . கரும்பை   விழுங்கினான் .   பச்சைக்   காய் கறிகளை   எடுத்து    உண்டான் . அரிசியையும்    வாய்   மடுத்து   உண்டான் .  இப்படி   அங்குள்ள  பண்டங்கள்   யாவற்றையும்   எடுத்து  எடுத்து வயிற்றுக்குள்   பெய்தும் அவனுடைய   பசி   அடங்கவில்லை . நெய்யை   ஆகுதி  செய்ய வேள்வித்   தீ ஓங்குவது   போலப் பசி  பின்னும்   மிகுதியாயிற்று.

   இதைக்   கண்டு  அதிசயமுற்ற   எம்பெருமாட்டி ,    தன்  கணவன்   முன்   சென்று   நாணத்துடன்   தலை   கவிழ்ந்து   நின்றாள். அவளைக்  கண்ட பெருமான்  ஒன்றும்  அறியாதவனைப்   போல்  , “    அவன் உண்டு   இன்னும் உணவு   மிஞ்சி   இருந்தால் , இன்னும் உள்ள  பூதங்களை   அனுப்புகிறேன் . ”   என்றான்

     அம்மை , “  சுவாமி,   இந்தக்   குட்டை  பூதம்  அங்கே   இருந்த   உணவு    முழுவதையும்   உண்டும்  அதன்   பசி  அடங்கின  பாடில்லை. இன்னும்  மற்றக்   கணங்களையும் விடுவீர்களானால்  இந்த  உலகம்   முழுதும்   விழுங்கி  விடுவார்கள். ”   என்று    சொல்லிக்   கொண்டிருக்கும்போது குண்டோதரன்  அங்கே   வந்தான் .                “ எம்பெருமானே , எம்பிராட்டி  சமைத்து   வைத்த  உணவையெல்லாம்   உண்டும்  இன்னும் என்  பசி  தீரவில்லையே !. பிறருக்கு   இட்டு   உண்ணாதவர்    வயிறு   போல   என்   வயிறு   எரிகிறதே !.  தேவரீர்   திரிபுரங்களுக்கு   இட்ட  தீயே    என்  வயிற்றுக்குள்   புகுந்ததோ  என்னவோ     தெரியவில்லையே  ?     என்று   கதறினான்

 

                                                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக