சனி, 6 ஏப்ரல், 2019


மனை விளக்கு – பகுதி 3
கி.வா.ஜ
இவ்வளவு கொடுமையுள பாலை நில வழி காதலனுடைய அகக் கண்ணிலே வந்து நின்றது.’ நாமா அந்த நிலையைக் கடந்து போனோம்!”என்று அவனே மலைத்தான். நினைத்தாலே நடுக்கம் தரும் இடம் அல்லவா அது? அந்த இடத்தின் வழியாக மறுபடியும் பொருள் ஈட்ட வேண்டுமென்று இந்த நெஞ்சம் நினைக்கிறதே!என்ன பைத்தியக்காரத் தனம்!
            சென்ற தடவை அவன் போனபோது அந்தப் பாலைவனத்தின் கொடுமையை நேரே கண்டிருக்கிறான்அதன் வழியில் செல்லும்போது உண்டான துன்பம் கிடக்கட்டும் , அப்போது அவன் உள்ளத்தே   எழுந்த ஒரு பெரிய போராட்டத்தை ஒருவாறு வென்று மேலே சென்றான்.அந்தச் செய்தியும் இப்போது அவனுக்கு நினைவுக்கு வருகிறது
            வில்லேர் உழவர் வாழும் வெவ்விய முன் இடங்களையுடைய சிறிய ஊர்கள் இடை இடையே இருக்கும் சுரத்தின் வழியே அவன் போய்க் கொண்டிருந்தான் .அங்கே வெயில் கடுமையாக அடிக்கும்போது தான் மிக மிகத் துன்பம் உண்டாகும்.ஆனால் இப்போது வெயில் தணிந்து கொண்டிருந்தது. மாலைக் காலம் வந்து விட்டது. அந்தச் சமயத்தில் தான் அவனுக்கு அதிகத் துயரம் உண்டாயிற்று.அவனுடைய நெஞ்சத்தின் உரமெல்லாம் எங்கேயோ போய் ஒளிந்து கொண்டது. அவன் அப்போது தன் மனையை நினைத்தான். மனைக்கு விளக்காகத் திகழும் காதலியை நினைத்தான். இந்தப் பாலை நிலத்தில் தன்னந்தனியே நாற்புறமும் ஜீவனற்ற காட்சிகளே நிறைந்த  இடத்தில் அவன் நிற்கிறான்.அவன் தன் வீட்டில் இருந்தானானால் இந்த நேரத்தில் அவன் காதலி மனைக்கு அழகைத் தருகிற விளக்கை ஏற்றி  அதை வணங்கி விட்டு அவன் முன் புன்னகை பூத்தபடி  வந்து நிற்பாளே! தலையை அழகாக வாரிப்பின்னி  மலரைச் சூடிக்கொண்டு நெற்றியில் திலகம் இட்டு  அந்த விளக்கைக் கையில் ஏந்திச் செல்லும் கோலம் இப்போது  நினைத்தாலும் உள்ளத்தைக் கிளரச் செய்கிறது.
இன்று அங்கே தன் இல்லத்தில் அவள் எப்படி இருப்பாள்? அதை உன்னிப் பார்த்தான் அந்தச் சுரத்திலே அவன் உரன் மாயும்படி வந்த மாலைக் காலத்திலே அவன் நினைத்துப் பார்த்தான். இப்போது அவள் மனைக்கு மாட்சி தரும்  திருவிளக்கை ஏற்றுவாள். ஆனால் தன் காதலன் அருகே இல்லாமையால் முகம் வாடி அப்படியே உட்கார்ந்து விடுவாள். அந்த விளக்கைப் பார்த்தபடியே “அவர் எங்கே இருக்கிறாரோ!’ என்ற சிந்தனையில் மூழ்கி இருப்பாள்.
            இந்த நேரத்தில் அவள் மனை மாண் சுடரை  ஏற்றி அதன் முன்னே அமர்ந்து தன் நெஞ்சிலே படரும் நினைப்பில் ஈடுபடிருப்பாள்’ என்று அவன் எண்ணினான்.அவன் அவளை நினைத்தான்.அவள் அவனை நினைப்பாள். இப்படித் துன்பம் அடைவதை விட பேசாமல்  ஊருக்கே திரும்பிப் போய்விடலாமா? என்று கூட அவன் நினைத்தான் .’சீ! சீ! முன் வைத்த காலை பின் வைக்கவாவது! உலகம் ஏசாதா? ஊரார் ஏச மாட்டார்களா? காதலியே ஏளனமாகப் பார்த்துச் சிரிக்க மாட்டாளா? இத்தனை தூரம் வந்து விட்டோம் . எப்படியாவது நினைத்த காரியத்தை முடித்துக் கொண்டு பணமும் கையுமாகத்தான் ஊருக்குப் போக வேண்டும் .’ என்று தீர்மானித்தான்.ஆயினும் அவன் மனை விளக்காகிய மனையில் விளக்குக்கு முன்னே நினைப்பில் ஆழ்ந்திருக்கும் கோலத்தை எளிதில் அவன் உள்ளத்திலிருந்து அகற்ற முடியவில்லை.மனம் சுழன்றது; சிதறியது.
            கடைசியில் ஆண்மை வென்றது. உறுதியுடன் பாலை நிலத்தைக் கடந்து சென்றான்.வேற்று நாட்டுக்குப் போய் பொருள் ஈட்டி வந்தான் .நினைத்த காரியத்தை நினைத்தபடி முடித்து வந்தான் .அதற்குரிய மனத் திண்மை அவனுக்கு இருந்தது.”எண்ணிய எண்ணியாங்கு  எய்துப எண்ணியார் , திண்ணியர் ஆகப் பெறின்”என்பதுதான் என்ன! அந்த மன நிறைவுக்கு ஒப்பு உண்டா? உண்டு. இப்போது அவனுடைய காதலி நினைத்த வினையை முடித்தால் வரும் இனிமையின் பிழம்பு போல இருக்கிறான். அவளை மீட்டும் பிரிந்து செல்வதா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக