புதன், 3 ஏப்ரல், 2019


 மனை விளக்கு
கி.வா ஜகந்நாதன்
இல்லற வாழ்வில் ஈடுபட்டு இன்பங்காணும் அந்தக் கட்டிளங்காளைக்கு  எதனாலும் குறைவில்லை.அழகுப் பிழம்பாகத் திகழும் காதலியைப் பெற்ற பின் அவனுடைய  இன்பத்துக்கு வேறு என்ன வேண்டும் ? உலகம் அறிய அவளை மனைவியக ஏற்றுக் கொண்டான்.அழகிய இல்லத்தில் அவளோடு வாழப் புகுந்தான். அறத்தை வளர்த்து இன்பக் கடலில் துளைந்தாடும் வாழ்விலே அவன் ஈடுபட்டான்.தம் முன்னோர்  ஈட்டு வைத்த பொருள் இருந்தாலும் தம் முயற்சியினாலே  பொருளைச் சம்பாதித்து அறம் புரிவதுதான் சிறப்பு என்பது தமிழர் கொள்கை.ஆகவே, அவன் அறமும்  இன்பமும் நெடுங்காலம் இடையூறின்றி விளையும்  பொருட்டுப் பொருள் ஈட்டி வர எண்ணினான்.அற்ம் பொருள் இன்பம் என்ற மூன்று உறுதிப் பொருள்களிலும் நடுநாயகமாக நிற்கும் பொருள் இருந்தால் அறம் செய்யலாம் . இன்பமும் துய்க்கலாம். இல்லையெனில் பிறருக்கு ஈயவும் இயலாது ; தாமே இன்பம் துய்க்கவும் முடியாது. இவற்றையெல்லாம் அவன் நன்கு உணர்ந்தான்.
வேற்று நாட்டுக்குச் சென்றால் நிறைய பொருள் ஈட்ட முடியும் என்று  நம்பிக்கை அவனுக்கு இருந்தது. திரை கடல் ஓடியும் திரவியம் தேடும் உறுதிப்பாடும் உண்டு, ஆனால் ஒரே  ஓர் எண்ணம்  இந்த முயற்சிக்குத் தடையாக நின்றது.; அதுதான் பிரிவு.
            அவனும் அவன் காதலியும் அன்றிற் பறவைகளைப் போலப் பிரிவில்லாமல் இணைந்து வாழ்கிறவர்கள். மலரும் மணமும் போல ஒருவரோடு ஒருவர் உள்ளம் ஒன்றி இசைந்து இன்ப வாழ்வு காண்கின்றவர்கள். இப்போது அவன் அவளைப் பிரிந்து செல்ல வேண்டியிருக்கும் . பொருள் ஈட்டச் செல்லும் இடத்திற்கு அவளையும் அழைத்துச் செல்வது இயலாத காரியம். பிரிந்துதான் போக வே ண்டும் . போகாமல் இருந்துவிடலாமென்றால்  , பொருள் இல்லாமல் இல்லற வாழ்க்கையில் ஒன்றும் செய்ய இயலாதே!
            பிரிந்து செல்லத்தான் வேண்டும் . எவ்வளவு விரைவிலே பொருளை சம்பாதித்துக் கொண்டு வரலாமோ அவ்வளவு விரைவிலே வந்துவிட வேண்டும் .என்றுதான் அவன் நினைத்தான் .இன்றியமையாத அளவுக்குப் பொருள் ஈட்டினால் போதுமே! கோடி கோடியாகக் குவித்துவிட வேண்டுமென்ற  ஆசை அவனுக்கு இல்லை.ஆதலின் சிறிது காலமே  அவனைப் பிரிந்திருக்க நேரும்.
            ஆனாலும் அந்தச் சிறிது காலம் கூடப் பிரிந்திருக்க முடியாதே! அவன் ஆடவன் ; மனத் திண்மை படைத்தவன். பொருளீட்டும் முயற்சியில் ஈடுபடுவதால் பிரிவுத் துன்பத்தை அவன் ஓரளவு மறந்திருக்கலாம் . அவனுடைய காதலி பிரிவைச் சகிப்பாளா?  ஒவ்வொரு கணமும் அவனைக் காணாமையாலே புழுவைப்போலத் துடிக்க மாட்டாளா?
பொருளோ இன்றியமையாதது. அதைச் சம்பாதிக்கக் காதலியைப் பிரிந்துதான் செல்ல வேண்டும் .பிரிவுத் துன்பமோ பொறுத்தற்கு அரியது. இந்த இசை கேடான நிலைமையில் என்ன செய்வது?
எப்படியோ   ஒருவாறு அவளுக்குத் தன் காதல் புலப்படும்படிக் கொஞ்சினான்.ஆறுதல் கூறினான்.தான் போக வேண்டியதின் அவசியத்தை உணர்த்தினான் .  புறப்பட்டுவிட்டான்.போய்ப் பொருள் தேடினான்.சம்பாதித்தான் , மறுபடியும்  ஊர் வந்து சேர்ந்தான் .அவளோடு இப்போது சேர்ந்து அநுபவிக்கும் இன்பம் முன்னைக் காட்டிலும் மிகுதியாக இருக்கிறது.நினைத்த காரியத்தை நினைத்த வண்ணம் நிறைவேற்றி வெற்றி கண்டு விட்டால் எத்தனை ஆனந்தம் இருக்கும் ! அவ்வளவு ஆனந்தம் வினையை முடித்தாற் போன்ற இனிமையைத்   தருபவள் அவள். செய்வினை முடித்தன்ன இனியோள். செய்வினையை  முடித்துப் பயன் பெற்றவன் அல்லவா அவன்?ஆகவே அந்த இன்பத்தையும்  இந்த இன்பத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் இயல்பு அவனிடம் அமைந்தது.   ( தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக