திங்கள், 11 செப்டம்பர், 2017


எழுத்தாளர் --  கி.வா.ஜ

“உங்களோடு எனக்குப் பழக்கமாகி  சுமார் பத்து வருஷம் இருக்குமல்லவா?”
“இருக்கலாம்”
உடனே அந்த எழுத்தாளர் தம்முடன் வந்திருந்த நண்பரைப் பார்த்து,” பார்த்தீர்களா? இவ்வளவு நாள் பழக்கமிருந்தும் நான் அதை உபயோகப் படுத்தவில்லை. நான் ஓர் எழுத்தாளன் என்பதை ஸார் தெரிந்து கொண்டிருந்தால் என்னைத் தொந்தரவு செய்திருப்பார்.” என்றார்
வாஸ்தவத்தில் அவர் எழுத்தாளரென்பதை  அவர் சொல்லத்தான் தெரிந்து கொண்டேன். என்னைப் பத்து வருஷமாகத் தெரியும் என்ற வாக்கு மூலத்திற்குத் தம்முடைய நண்பரைச்  சாட்சி வைக்கும் இவருடைய நோக்கம் என்ன என்பதை நான் ஒரு கணத்தில் ஊகித்துக் கொண்டுவிட்டேன்.
            “ஏதாவது கதை எங்கள் பத்திரிகைக்கு அனுப்பியிருக்கிறீர்களோ?”
            அனுப்பிவிட்டு அதைப்பற்றிச் சொல்ல வந்திருக்கிறாரென்று நான் அனுமானித்தது பிசகாய்ப் போய்விட்டது .
            “ என்ன ஐயங்கார் ஸ்வாமி , ஸார் சொல்வது  காதில் விழுகிறதா? நான் இதுவரையில் கதை எழுதி அனுப்பாதது பிழையென்பதை எவ்வளவு நாஜுக்காக எடுத்துக் காட்டுகிறார்கள். பார்த்தீரா?”
            “ஹஹ்ஹஹஹ்ஹா !” என்று ஐங்கார் ஸ்வாமி   சிரித்தார்.
            “நீங்கள் ஏகப்பட்ட புனை பெயர்கள் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்களோ?”என்று எழுத்தாளர் அடுத்தபடி   விசாரிக்கத் தொடங்கினார்.
            “ஏகப்பட்டது ஒன்றும் இல்லை. எப்பொழுதாவது அவசியம் நேர்ந்தால் புனைபெயரோடு எழுதுவதுண்டு,”
            “ ஆமாம் , ஆமாம் . புனை பெயர் போட்டுக் கொள்கிறவர்களெல்லாம் சம்சயாத்மாக்கள். தாங்கள் எழுதும் சரக்கு நன்றாக இருக்கிறதோ இல்லையோ என்று அவர்களுக்கே சந்தேகம் . நன்றாக இருந்தால் நான் தான் என்று சொல்லிக் கொள்ளலாம் . இல்லையானால் பேசாமல் இருந்துவிடலாம் .இது ஒரு பெரிய சௌகரியம் . அது இருக்கட்டும் . நான் கதை எழுதுவதாக இருந்தால் புனை பெயர் போட்டுக் கொள்ளலாமா?  உங்கள் யோசனை என்ன?”
            ஆள் கைகாரப் பேர்வழி. தாம் எழுத்தாளரென்பதை என்னை ஒப்புக்கொள்ளச் செய்து விட்டதாகவும்    , அடுத்தபடி எங்கள் பத்திரிகையில்  ஓர் இடம் நிச்சயமாக உண்டென்று நான் வாக்குறுதி கொடுத்து விட்டதாகவுமல்லவா அவர் காட்டிக் கொள்கிறார்?”
            “ உங்கள் இஷ்டம் போலச் செய்யலாம். எதற்கும் முதலில் புனை பெயர் போட்டுக் கொண்டால்  நீங்கள் சொன்னபடி வாசகர்கள் கருத்தைச் சோதிக்கலாம் . இதுவரைக்கும் ஏதாவது பத்திரிகையில் எழுதியிருக்கிறீர்களா?”
            அவர் சிறிதாவது யோசிக்க வேண்டுமே! பதிலைத் தயாராக வைத்துக் கொண்டிருந்தவர் போல “ என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? என்னிடத்தில் இப்வளவு அபிமானத்தோடு இருக்கும் உங்கள் பத்திரிகையை விட்டு விட்டு மற்ற பத்திரிகைக்கு எழுதுவேனோ?நன்றாகக் கேட்டீர்கள்!.... என்ன ஐயங்கார் ஸ்வாமி ஸார் பேசுவதன் ரகசியம் உமக்குத் தெரிகிறதா? வேறு பத்திரிகையில் எழுதுவது அவ்வளவு உசிதமில்லை என்பதை எப்படி எடுத்துக் காட்டுகிறார்கள் பார்த்தீரா?இவர்கள் எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த பேச்சாளர் என்பதையும்  நான் வரும்போதே சொல்லவில்லையா? ”
            ஐயங்கார் ஸ்வாமி,” ஆமாம் , ஆமாம் ” என்று ஒத்து ஊதினார்.
            “அதெல்லம் சரி! புனை பெயரோடு எழுதுவதுதான் என்னைப் போன்றவர்களுக்கு  ஏற்றதென்பதை  வேதவாக்காக ஒப்புக்கொள்கிறேன் . நான் கதை எழுதட்டுமா?”
            “ எது உங்களுக்குப் பிடிக்குமோ அதை எழுதுங்களேன்”
“ எனக்குப் பிடிக்கிறதா? நீங்கள் சொல்லுங்கள் ஸார். உங்களுக்குப் பிடிப்பது எது சொல்லுங்கள். ”
            நான் என்ன பதில் சொல்வது? “ எனக்குப் பிடிப்பது இங்கு முக்கியம் அல்லவே. வாசகர்களுக்குப் பிடிப்பதுதான் அவசியம் . அவர்களுக்குப் பிடிக்கும்படி கதையோ கட்டுரையோ எழுதி அனுப்பலாம் ”
            “ அதுதான் கேட்டேன் , வாசகர்களுக்கு எந்தமாதிரி எழுதினால் பிடிக்கும் ? உங்களுடைய அநுபவம் அபாரம் . கொஞ்சம் சொல்லுங்கள்.”
            ‘என்னடா இது தொல்லையாய்ப் போய்விட்டது’ என்று யோசித்தேன் .
            “ நீங்கள் எழுதி அனுப்புங்கள். எங்கள் பத்திரிகைக்குத் தக்கதாக இருந்தால் பார்த்து வெளியிடுகிறேன் . உங்களுக்கு அதிகச் சிரமம் தந்துவிட்டேன் . போய் வாருங்கள்”  என்று வலிய விடை கொடுத்தேன் .
            அவர் அந்த விடையை  லக்ஷ்யமே செய்யவில்லை. “ நீங்கள் சொல்லும்போது , எழுதி அனுப்பாமல் இருப்பேனா? அவசியம் எழியனுப்புகிறேன். கவனித்துக் கொள்ளுங்கள். கதை அனுப்புகிறேன் , ரொம்ப ரஸமான கதைகளை அனுப்புகிறேன் . நீங்கள் இஷ்டப்படி மாற்றித் திருத்தி  வெளியிடலாம் . உங்களிடத்தில் எனக்குப் பூரண நம்பிக்கையுண்டு.  என் பெயரை மட்டும் போட்டுவிட வேண்டும் ..புனை பெயரையே போட்டு விடுங்கள். ”
            அவர் நிறுத்துகிறதாகத் தெரியவில்லை.
“ ஒரு விஷயம் சொல்ல வந்தேன் .மறந்துவிட்டேன் . கதை எத்தனை பக்கம் இருக்கலாம் ? பெரிதாக வளர்த்தலாமா? குறுக்கிவிடலாமா?”
            “அட ராமா! இந்தத் தலைவலி நிற்காதா?” என்று மனசுக்குள் வேதனைப்பட்டுக் கொண்டேன் . முகத்தில் மாத்திரம் சிரிப்பை வருவித்துக் கொள்ள வேண்டியிருந்தது.” சுருக்கமாகவே எழுதுங்கள் ; போய் வாருங்கள் ” என்று மறுபடியும் சொன்னேன் .
“ என்ன ஐயங்கார் ஸ்வாமி? ஸார் எவ்வளவு யோசனைகள் சொல்லுகிறார்கள் பார்த்தீரா? எப்படியாவது நாலு வரி அந்தப் பத்திரிகையில் நான் எழுத வேண்டுமென்பதில் இவருக்கு எவ்வளவு சிரத்தை பார்த்தீரா?”
            ‘அட, படு பாவி!’ என்று மனசுக்குள் வைதேன் . வேறு என்ன செய்வேன் .
            “ சரி! போய் வருகிறேன் . என்னை அபிமானித்ததற்குப் பல கோடி வந்தனம் . இந்த ஐயங்கார் ஸ்வாமியிடமே இரண்டு நாட்களில் ஒரு கதை கொடுத்தனுப்புகிறேன்.உங்கள் தயவை எதிர்பர்க்கிறேன் . போய் வரட்டுமா?”
            “ ஆஹா! போய் வாருங்கள் , நான் கவனிக்கிறேன் ”
            அப்பாடா! அந்த இரண்டு பேரையும் வாசல் வரையில் கொண்டுபோய் விட்டு விட்டு ,வீதியில் இறங்கிப் போய் விட்டார்களென்ற   நிச்சயத்தின் மேல் உள்ளே வந்து நாற்காலியில் ‘பொத்’ தென்று உட்கார்ந்து  ஒரு பெருமூச்சு விட்டேன் .

        



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக