ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

  எண்ணத் தெரியுமா? ---கி.வா.ஜ

தமிழ் நாட்டிலே பழகாத அயல்நாட்டார் ஒருவர் தமிழைக் கற்றுக் கொள்கிறார். கூடிய வரையில் சிரத்தையோடு பயின்று வருகிறார். தொல்காப்பியத்தை நன்றாகப் படிக்கிறார்.மற்ற இலக்கியங்களை இன்னும் படிக்கவில்லை.தொல்காப்பியம் மிகவும் பழங்காலத்து இலக்கண நூல் என்றும் இப்பொழுது கிடைக்கும் தமிழ் நூல்களுள் அதுவே காலத்தால் முந்தியதென்றும் தெரிந்துகொண்டு ஆழ்ந்து பயின்று , தொல்காப்பியத்தினால் உணரப்படும் செய்திகளைத் தொகுக்கிறார்.அவருக்கு என்ன என்ன விஷயங்கள் கிடைக்கும்?தமிழர்கள் அந்தக் காலத்திலேயே நன்றாக வாழும் வகைகளை உணர்ந்திருந்தார்கள்   என்ற செய்தி கிடைக்கும் . மலர்களும் , மரங்களும் அவர்கள் வாழ்க்கையில் இன்பத்துக்குக் கருவிகளாயின என்பது தெரியும் . காதலும் , வீரமும்  தமிழர் வாழ்க்கையில் இரண்டு மூச்சு நாடிகள் என்பதை உணர்வார்.
            எழுத்ததிகாரத்தை  வாசித்து முடித்தாலே  பல பல செய்திகள்  தெரிய வரும் . தமிழர்கள் வியாபாரத் துறையிலும் சிறந்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் . அவர்களுக்கு எண்ணத் தெரியுமா? அளக்கத் தெரியுமா? நிறுக்கத்   தெரியுமா? எல்லாம் தெரியும் என்ற செய்தியை தொல்காப்பியத்தின் முதல் அதிகாரமே புலப்படுத்துகிறது.
            ஒன்று முதல் பத்து வரையில்  எண்ணத் தெரியும் .பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று—இப்படி எண்ணிக்கொண்டே போகத் தெரியும் . “இதென்ன? அரிச்சுவடி தெரியும் , எண் சுவடி தெரியும் என்பதையெல்லாம் பிரமாதமாகத் தமிழர்களுடைய கௌரவத்துக்குக் காரணமென்று சொல்வீர்கள் போல் இருக்கிறதே!”  என்று நண்பர்கள் பரிகாசம் செய்ய எண்ணலாம் . பல நூற்றாண்டுகளுக்கு முன்பு,  நாமே நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கிறோம் என்று இறுமாந்து  நின்ற இந்தக் காலத்து மக்களும் கண்டு பொறாமைப்படும்  அமைதியான வாழ்க்கை வாழ்ந்த அவர்கள் , இத்தகைய வரையறைகளைக்  கொண்டிருந்தார்கள்  என்பது ஆச்சரியமல்லவா?மொஹெஞ்சதாரோவில் உடைந்த மரக்கால் ஒன்று கிடைக்கிறதென்றால் , அதை எடுத்துப் படம் பிடித்துச் சரித்திர ஆராய்ச்சி செய்யப் புகுவது எவ்வளவு உபயோகமோ அவ்வளவு உபயோகம் இந்த ஆராய்ச்சியிலும் இருக்கிறது.அது மரக்கால் என்ற பண்டத்தின் ரூபத்தைப் பற்றிய ஆராய்ச்சி; ரூபமாக இருந்தால் என்ன ? நாமமாக  இருந்தால் என்ன? இரண்டும் அத்தகைய பொருள் வழங்கியதைப் புலப்படுத்தும் சாட்சிகளே அல்லவா?
            தொண்ணூறு , நூறு , தொள்ளாயிரம் ஆயிரம் , ஈராயிரம் , நூறாயிரம் வரையில் தமிழர்கள் எண்ணி வந்தார்கள்.தொல்காப்பியத்தில் இந்த எண்களைப் பற்றிச் சொல்ல என்ன காரணம்? ‘பன்னிரண்டு என்ற வார்த்தை எப்படி வந்ததென்பதை  இலக்கண வழியில் தொல்காப்பியர் ஆராய்கிறார்.’பத்தும் , இரண்டும் சேர்ந்து பன்னிரண்டு ஆகின்றன.பத்து இரண்டு என்ற இரண்டு வார்த்தைகள்  புணரும் பொழுது என்ன என்ன மாற்றங்களை அடைகின்றன என்பதை வரையறுக்கிறார். இப்படியே மற்ற எண்கள் , அளவுப்பெயர்கள், நிறைப்பெயர்கள்   ஆகியவற்றின் ஆராய்ச்சி தொல்காப்பியருடைய  புணர்ச்சி இலக்கணத்தில் அகப்படுகிறது.
            நூறாயிரத்திய ‘லக்ஷம்’ என்று இப்போது வழங்குகிறோம் . ‘ல’என்ற எழுத்து பழைய தமிழிலொரு வார்த்தையின் முதல் எழுத்தாக வராது.வட மொழி வார்த்தை தமிழில் வரவேண்டுமானால் அதற்கு முன்னால் ‘இ’ என்ற எழுத்து   , ‘ல’ என்ற  எழுத்துக்குக் கை கொடுக்க வேண்டும் . ‘லங்கை’ என்பது , ‘இலங்கை’ என்றும் , ‘லாபம்’ என்பது ‘இலாபம் ‘ என்றும் வரும் .
தொல்காப்பியத்தில் லக்ஷம் என்ற பெயர் வரவில்லை. ‘நூறாயிரம் ‘என்றே பழந்தமிழர் வழங்கியிருக்க வேண்டும் . கடைச்சங்க நூல்களில் ,’கோடி’ என்ற எண்ணும் வருகின்றது. அதற்கும் மேலே தமிழர் எண்ணத் தெரிந்து கொண்டிருந்தனர்.  கோடிக்கு மேல் மூன்று எண்ணிக்கைகளின் பெயர்களைத் தொல்காப்பியச் சூத்திரம் ஒன்று குறிக்கின்றது.
            ஐஅம் பல் என வரூம் இறுதி
          அப்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும் .
‘ஏழு’ என்ற வார்த்தைக்கு முன் எண்ணிக்கைப் பெயர்கள் வந்தால் இரண்டும் சேர்ந்து எப்படி வழங்கும் என்பதைச் சொல்லும் இடத்தில் இந்தச் சூத்திரம் இருக்கிறது. ‘ஏழ்’ என்பதே  ‘ஏழு’என்ற அர்த்தத்தைத்   தருவது.அதற்கு முன்னால் எண்ணளவைப் பெயராகிய தாமரை , வெள்ளம் , ஆம்பல், என்ற மூன்றும் வந்தால் ,’ஏழ் தாமரை’ , ஏழ் வெள்ளம் , ‘ஏழாம்பல்’ என்று நிற்கும் .இதைச் சூத்திரம் சொல்கிறது.’ஐ,அம்,பல்’ என்று வருகின்ற இறுதியையுடைய ,பண்டங்களின் பெயர்கள் அல்லாத எண்களின் பெயர்களாகிய மூன்றும் வந்தாலும் முன்னே சொன்னபடி நிற்கும்’  என்பது இதன் பொருள்.  கோடிக்கு மேலே உள்ள ஒரு பெரிய அளவுக்கு , ‘தாமரை’ என்றும் ,அதற்கும் மேற்பட்ட ஓர் எண்ணுக்கு ,’வெள்ளம்’ என்றும் , அதைவிடப் பெரிய எண் ஒன்றுக்கு,’ஆம்பல்’என்றும் பெயர் வழங்கின  செய்தி இதனால் தெரிய வருகிறது.
பின்ன எண்ணைத் தொல்காப்பியர் “பால்வரை கிளவி “ என்று சொல்கிறார்.தமிழில் உள்ள எண் சுவடியில் ‘கீழ்வாயிலக்கம் , மேல்வாயிலக்கம் , குழிமாற்று ‘ முதலிய பலவகைக் கணக்கு வகைகள் உண்டு .அவை தொன்று தொட்டுத் தமிழ் நாட்டில் வழங்கி வந்திருக்கின்றன.அதில் உள்ள பெயர்களில் பெரும்பாலான தனித் தமிழ்ப் பெயர்கள் , அவற்றைக் கொண்டே அவை தமிழ் நாட்டின் வாழ்க்கையில் பல காலமாக ஒன்றி வழங்கி வந்தன  என்பதை  உணரலாம் .
            வடமொழியில் ‘சங்கம்’ , ‘பத்மம் ‘ போன்ற பேரெண்கள் வழங்குகின்றன. ‘தாமரை’ என்பது ‘பத்மம்’ என்பதின் மொழிபெயர்ப்பாக இருக்கலாம். ஆனால், வெள்ளம் என்ற சொலும் ஆம்பல் என்ற சொல்லும்  அங்ஙனம் வந்தன  என்று தோன்றவில்லை. ‘ வெள்ளம்’ என்ற எண்ணைத் தமிழ் நூல்களில் பல இடங்களில் காணலாம் . கம்பராமாயணத்தில் சேனைக் கணக்கு  வரும் இடங்களில் “ஆயிர வெள்லம் சேனை” என்பது போல  இந்த வார்த்தை வருவதை உணரலாம்.
            திருமுருகாற்றுப்படையில் “தாமரை பயந்த தாவில்  ஊழி, நான்முக ஒருவன் “ என்று ஒரு பகுதி வருகிறது. ‘தாமரையென்னும் எண்ணையுடைய ஆண்டுகளைத் தன் ஆயுளாகப் பெற்ற பிரமதேவன்’ என்று நச்சினார்க்கினியர் அர்த்தம் செய்கிறார். பிரம தேவன் தாமரையில் வாழ்பவன் .’அலரோன்’, ‘பதுமன்’ , என்ற பெயர்களால் வழங்கப்  பெறுபவனவனுடைய ஆயுளையே ஓர் அளவாக்கித் தாமரையோன் ஆயுளாதலின் ,’தாமரை’ என்று வகுத்தார்களோ என்னவோ!
பால்வரை கிளவியாகிய பின்னம் முதல் ஆம்பலென்னும்  பேரெண்வரையில்  தமிழர்கள் உணர்ந்திருந்தனர். என்பதை எழுத்ததிகாரத்தின் மூலம் முன்னே சொன்ன அயல்நாட்டார் தெரிந்து கொள்வார். நாமும் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக