வியாழன், 7 செப்டம்பர், 2017

என் புத்தகங்கள்--- கி.வா.ஜ  ---பாகம் 1
            யாராவது ஓர் அறிஞரைப் பார்த்துச் சிறிது நேரம்  பேசி அவருடைய  அறிவுரையைக் கேட்டு வரலாம்  என்று நினைக்கிறோம் . அவர் வீட்டுக்குப் போகிறோம் . அவர் இருக்கிறதில்லை. இருந்தாலும் வேலை அதிகமாக இருப்பதனால், “ அப்புறம் வாருங்கள்’ என்று சொல்லி விடுகிறார். இன்னும் சில நண்பர்களை நான் நினைத்த நேரத்துக்குப் பார்க்க முடிகிறதில்லை.
            ஆனால் வேறு சில பெரியவர்க்ள் இருக்கிறார்கள்.  அவர்கள் இப்போது இல்லை யென்றாலும் , இருந்துகொண்டுதான்   இருக்கிறார்கள். அவர்களை எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் வருவார்கள். நம்மோடு பேசுவார்கள். நமக்கு அறிவுரை தருவார்கள். அவர்கள் யார் தெரியுமா? திருவள்ளுவர் , கம்பர், ஷேக்ஸ்பியர், மில்ட்டன், காளிதாஸர் முதலியவர்கள். அவர்களை உடம்புடன் பார்க்க முடியாது என்பது உண்மைதான் . நாம் என்ன, அவர்களோடு கை குலுக்கப் போகிறோமா ? சாப்பாடு போடப்போகிறோமா? அல்லது உட்கார்த்தி வைத்து விசிறி வீசப் போகிறோமா? அவர்கள் யாவரும் தம்முடைய நூல்களில் வாழ்கிறார்கள். அவர்களே அந்த நூல்களின் வடிவத்தில் இருக்கிறார்கள். அவர்களை எப்போது வேண்டுமானாலும் அணுகலாம் . அலுப்புத் தட்டினால் ‘கொஞ்சம் இருங்கள்’என்று கூறி வந்து விடலாம் . ‘போர் ‘ அடிக்கிற பெரிய மனிதர்களைப் போல நம்மைத் தொந்தரவு பண்ண மாட்டார்கள்.
            புத்தகங்களை மனிதன் பெற்ற பெரும்  செல்வம் என்றுதான் சொல்ல வேண்டும் .அதுவும் அச்சு யந்திரம் வந்த பிறகு எத்தனை வகையான புத்தகங்கள் , எத்தனை அழகான வடிவத்தில் வந்திருக்கின்றன!
            நான் புத்தகப் பித்தன் . புத்தகப் புழு என்று சொல்லுங்கள். ஏற்றுக் கொள்கிறேன் ;வேறு எதிலாவது இருக்கும் புழுவைவிடப் புத்தகப் புழு உயர்வுதானே? சின்னப் பிராயத்திலிருந்தே புத்தகம் சேர்ப்பதென்றால்  எனக்கு ஆசை. நாவல்கள்  பலவற்றைச் சேர்த்து வைத்தேன் .இலக்கியப் புத்தகங்களையும் வாங்கிச் சேர்த்தேன் .1916-17ஆம் வருஷம் என்று ஞாபகம் . என் மாமா வீட்டிலிருந்து படித்துக்கொண்டிருந்தேன் .என் தகப்பனார் வேறு ஊரில் இருந்தார். மத்தியான்ன  நேரங்களில் சிற்றுண்டி வாங்கிச் சாப்பிடப் பணம் கொடுத்து வைப்பார். நான் அந்தப் பணத்துக்குப் புத்தகம் வாங்கி விடுவேன் . ஒருமுறை கந்தர் அநுபூதி ,கந்தர் சஷ்டி கவசம் போன்ற நூறு  சில்லரை நூல்கள் அடங்கிய விநாயகர் கொத்து என்ற புத்தகத்தையும் , அருணாசல புரணத்தையும் வாங்கி வந்தேன். அந்தக் காலத்தில் நான் மூன்றாவது பாரம் படித்துக் கொண்டிருந்தேன்.விநாயகர் கொத்து , குட்டையான புத்தகம் . தடிமனாக இருக்கும் . “ இதை ஏன் வாங்கினாய் ?” என்று என் மாமா கேட்டார்.” எனக்குப் பாடம் “ என்றேன் . அது பாடம் அன்று என்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும் . அதை வாங்கியதற்காகவும் , பொய் சொன்னதற்காகவும்  அவர் என்னைக் கடுமையாக்க் கோபித்துக் கொண்டார்.
            கொஞ்சம் கொஞ்சமாக புத்தகங்களைச் சேர்த்து  எங்கள் ஊரில் உள்ள எங்கள் வீட்டில் வைத்தேன் . ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி , இரத்னபுரி ரகசியம் , மின்சார மாயவன் , தாசி தையல் நாயகியின் சமர்த்து –இப்படியெல்லாம் பல நாவல்கள் இருந்தன.
            விவேக சாகரம் என்ற ஒரு புத்தகம் . அந்த புத்தகத்தை இப்போது அச்சிட முடியாது. பச்சைச் சிங்காரம் அது. எட்டையாபுரத்தில் இருந்த முஸ்லிம் ஒருவர் எழுதினது அது.நடை கடுமையான பண்டிதர் நடை .
            ஒரு பிராமணன் நான்கு வேதங்களும் கற்றுக் கொள்கிறான் . அவனுக்குக் கல்யாணமாகிறது. வேதங்களை அத்தியயனம் செய்துவிட்டு வீட்டுக்கு வருகிறான் . மனைவியோடு வாழலாம் என்று வருகிறான் .அவன் மனைவி ஒரு கள்ளப் புருஷனை வைத்துக் கொண்டிருக்கிறாள். தன் கணவரிடம் ,” நான்கு வேதங்கள் தானே கற்றிருக்கிறீர்கள் . ஐந்தாம் வேதமும் க்ற்றுக் கொண்டு வாருங்கள் “ என்று சொல்லி அனுப்பிவிடுகிறாள். அந்த அப்பாவிப் பிராமணனும் உண்மையென்று நம்பிப் புறப்பட்டு விடுகிறான் . சில பெண்களைச் சந்தித்துத்  தான் ஐந்தாம் வேதம் கற்றுக்கொள்ள வந்திருப்பதாகவும் அதற்குரிய குருவைத் தேடிக் கொண்டிருப்பதாகவும்  சொல்கிறான் . அந்தப் பெண்கள் தாங்களே  ஐந்தாம் வேதத்தைக் கற்றுத்தருவதாகச் சொல்கிறார்கள்.
            ஒவ்வொருத்தியும் வெவ்வேறு  வகையான தந்திரம் செய்து தன் கணவன் இருக்கும்போதே  அந்தப் பிராமணனோடு இன்புறுகிறார்கள். “ இதுதான் ஐந்தாம் வேதம்” என்கிறார்கள் .இப்படி ஐந்து பேர் ஐந்து வகையில் அவனுக்குக்  கற்றுக் கொடுக்கிறார்கள். இடையில் பல உபாதைகள் . எல்லாம் பச்சை பச்சையான செய்திகள்.
            இந்தக் கதையைச்  சொல்வதுதான் விவேகசாகரம் . அந்தப் பிராமணன் பெற்றுக் கொண்ட விவேகம் முறையற்ற காமலீலை .இப்போது மட்டும் அந்தப் புத்தகத்தை வெளியிட அரசு அநுமதிக்குமானால்  ஒரே நாளில் லட்சம் பிரதிகள்  செலவாகிவிடும் . விவேக சாகரமும் வைத்திருந்தேன் , கைவல்ய நவநீதமும் வைத்திருந்தேன். இராஜாம்பாள் சரித்திரம் , ஹனுமான் சிங் முதலிய துப்பறியும் நாவல்களும் இருந்தன. அப்போது வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவல்கள் வராத காலம் . ஆரணி  குப்புசாமி முதலியார் தழுவல் நாவல்கள் எங்கும் பரவியிருந்த காலம் .
            கிட்டத்தட்ட முன்னூறு புத்தகங்கள் என்னிடம் இருந்தன. அவற்றையெல்லாம் சேர்த்துப் பூர்ணமதி புத்தக சாலை என்று பெயரிட்டேன் . பூ.ம.பு என்று சுருக்கி மாக்கல்லில் நானே அச்சு அமைத்து மையில் தோய்த்துப் புத்தகங்களில் குத்தினேன் . நாவல்களை அன்பர்களுக்குக் கொடுத்து வாசித்த பிறகு வாங்கி வைப்பேன் .இலவச வாசக சாலை என்னுடைய புத்தக சாலை
           

 (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக