வியாழன், 14 செப்டம்பர், 2017

விடைகள் ஆயிரம் ----கி.வா.ஜ
குட்டித் திருவாசகம் என்ற பெயருடைய நூல்  ஒன்று இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் . அதன் ஆசிரியர் யார் ?
கரிவலம் வந்த நல்லூர் என்ற தலம் திருநெல்வேலி மாவட்டத்தில்  இருக்கிறது.அதைக் கருவை என்றும் சொல்வார்கள்.  கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி , கருவை வெண்பா அந்தாதி  , கருவைக் கலித்துறை அந்தாதி என்ற  மூன்று பிரபந்தங்களை அதிவீரராம பாண்டியர்  இயற்றியுள்ளார் .அவற்றிற்குக் குட்டித் திருவாசகம் என்று பெயர் வழங்கும் .
மாதானுபங்கி என்பதன் பொருள் என்ன?
திருவள்ளுவரைக் குறிக்கும் . அச்சொல்லுக்கு தாய்க்கு நிகராக இருப்பவன் என்று பொருள்.
புராணத்துக்கும் இதிகாசத்துக்கும் வேறுபாடு என்ன?
புராணம் என்பது கடவுளின்  திருவிளையாடல்களைச் சொல்வது. இதிகாசம் என்பது இவ்வுலகத்தில் தெய்வம் தோன்றி மக்களைப் போல வாழ்ந்த வரலாற்றை சொல்வது. இதிகாசம் என்பதற்கு ‘இப்படி முன் இருந்தது’ என்று பொருள். பாரதமும் இராமாயணமும் இதிகாசங்கள்.
சிவகீதை என்னும் நூல் யார் இயற்றியது?
பத்ம புராணத்தில் உள்ளது. இராமபிரானுக்குச் சிவபிரான் ஞானம் உணர்த்த வாய்மலர்ந்தருளிய நூல்.
      நளனுடைய கதை எங்கே வருகிறது?
மகாபாரதத்தில் ஆரண்ய பருவத்தில் வருகிறது.
      அர்ஜுனனுக்கு நரன் என்ற பெயர் வரக் காரணம் என்ன?
நாராயணனுடைய தோழனான நரன் என்பவனே அர்ஜுனனாகப் பிறந்தான் . அதனால் அந்தப் பெயர் வந்தது.
      திரிபிடகம் என்பன யாவை?
புத்தன் அருளிச் செய்த ஆகமங்கள் . அவை வினயபிடகம் , ஸூத்ர பிடகம் , அபிதர்ம பிடகம் என்பவை.
கர்ணனுக்கு இயற்பெயர் வேறு உண்டா?
வஸூஷேணன்  என்பது அவன் இயற்பெயர்.
      சற்காரிய வாதம் என்பது என்ன?
உள்ளது போகாது ,இல்லது வாராது என்றல்
ஆப்த வாக்கியம் என்பது யாது?
அறிஞர் கூறியவை. அவை பிரமாணமாகக் கொள்வதற்கு உரியவை.
முத்தி நகர் ஏழு எவை ?
அயோத்தி, மதுரை, மாயாபுரி, காசி காஞ்சி, அவந்தி, துவாரகை என்பன.
நடராஜ வடிவம் பஞ்சாட்சர சொரூபம் என்பர் . விளக்க வேண்டும் .
திருவடி நகரம் , திருவுந்தி மகரம் , திருத்தோள் சிகரம் , திருமுகம் வகரம் , திருமுடி யகரம் .
நவசக்திகள் யாவர்?
மாகேசுவரி, கௌமாரி, வாராகி, மகாலக்ஷ்மி, வைஷ்ணவி, இந்திராணி , பிராம்மி, நாரசிம்ஹி,சாமுண்டி.
1.       அஷ்ட வசுக்கள் யாவர்?
தர்ம தேவதையின் புத்திரர்களாகிய தரன் , திருவன் , ஸோமன் , அஹஸ், அநலன் , ப்ரத்யூஷன்,  ப்ரபாஸனென்னும் எண்மரும் அஷ்ட வஸுக்கள்.  
மூன்று காலையுடைய தேவர் யார் ?
ஜூர தேவதைக்கு மூன்று கால்கள் உண்டு . முனிவர்களில் பிருங்கி முனிவர் மூன்று கால்களை உடையவரானார்.


1 கருத்து: