புதன், 13 செப்டம்பர், 2017

விடைகள் ஆயிரம் -----   கிவா.ஜ

இலக்கிய இலக்கணத் துறைகளிலும் சமயத்துறையிலும்  பிற துறைகளிலும் பல அன்பர்கள் பல வினாக்கள் விடுக்க அவற்றிற்குரிய விடைகள் கலைமகளில்  மாத  இதழ் பத்திரிகையில் வந்தன. ஓரளவு ஐயங்களைத் தெளிவிக்கும் விடைகளை இங்கே வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
1.‘சுந்தர காண்டம் என்று பெயர் வந்ததற்குக் காரணம் என்ன?
பல காரணங்களைச் சொல்வார்கள். ராமருடைய சொந்தரியத்தை சீதைக்கு அநுமன் எடுத்துச் சொல்லும் பகுதி இருப்பதனால் அந்தப் பெயர் வந்ததென்றும் , சுந்தரம் என்பது இழந்ததைப் பெறுவது  என்ற பொருளுடையதாதலின்  இழந்த சீதையைக் கண்டு பிடித்ததனால்  அப்பெயர் வந்தது என்றும் சொல்வதுண்டு. சுந்தரன் என்பது அநுமான் பெயர் . அவருடைய பராக்கிரமங்களைச் சொல்வதால் அந்தப் பெயர் உண்டாயிற்று என்பர். அதுவே சிறப்பான காரணம் .
2.இராமாயணத்துக்கு பௌலஸ்த்ய  வதம் என்ற பெயர் உண்டென்பர் . அப்பெயர் எவ்வாறு வந்தது ?
புலஸ்திய முனிவருடைய  குமாரன் விசிரவஸ் என்னும் முனிவன் . அவன் மகன் இராவணன் . புலஸ்திய முனிவர் பரம்பரையில் பிறந்ததனால் அவனைப் பௌலஸ்த்தியன் என்பர். அவனை வதம் செய்த கதையாதலால் இராமாயணத்துக்கு பௌலஸ்யவதம் எனப் பெயர் வந்தது.  
3.சீதாப்பிராட்டி அசோக வனத்தில் எவ்வளவு காலம் இருந்தாள்?                           
பத்து மாதம் ; “இலங்கையிலே மாதங்கத்தான்   ஐயிரு திங்கள் தாழ்த்துப் பின் வாம்பரிதேர், மாதங்கத்தானை , வலத்தானை முன்  வதைத்தானை  “ என்று திருவரங்கத்தந்தாதி யில் வருவது காண்க. மா தங்க ---திருமகளாகிய சீதை தங்க.
4.சீதையிப் திருமணத்தின் பொருட்டு இராமன் ஒடித்த வில் சிவபிரானுடைய வில் என்று இராமாயணம் கூறுகிறது. அந்த வில் ஜனகனிடம் எவ்வாறு வந்தது?
விசுவகர்மா இரண்டு வில்லைப் படைக்க , ஒன்றைத் திருமாலும் மற்றொன்றைச் சிவபெருமானும் எடுத்துக் கொண்டனர். தேவர்களின் வேண்டுகோளின்படி அவ்விருவரும் போர் புரியச் சிவபிரான் வில் சிறிது முறிந்தது.முறிந்த வில்லைக் கொண்டு போர் செய்வது மரபன்று ஆதலால் போர் மேலே நடை பெறவில்லை. அந்த வில்லைச் சிவபெருமான் தேவரதன் என்னும் மன்னனிடம் கொடுத்தான் . அவன் அதைப் பாதுகாத்து வந்தான் . அவன் குலத்தில் தோன்றிய ஜனகனும் அதை வைத்துப் பாதுகாத்தான் .
5.கௌசல்யா தேவியைக் கோசல நாட்டு அரசனின் புதல்வி என்பர். தசரதனும் கோசல நாட்டு அரசன் . அந்த அரசனும் தசரதனும் ஒரே நாட்டின் அரசர்களாவது எப்படி? வேற்று நாட்டு அரசன் பெண்ணாக இருந்தால்தானே  மணம் புரிந்து கொள்ளலாம்.?
கோசலம் தட்சிண கோசலம் , உத்தர கோசலம் என்று இரண்டு பிரிவை உடையது. தட்சிண கோசல மன்னனின் புதல்வி கோசலை. உத்தர கோசல மன்னன் தசரதன் .
6. இராமாயணத்தில் எந்தக் காண்டம் பூசைக்கு உரியது?
இராமாயனம் முழுதுமே பூசைக்கு உரியது தான் . தனிக் காண்டங்களில் சுந்தர காண்டத்தைப் பூசிப்பதும் பாராயணம்  செய்வதும் சிறப்பு என்பர்.
7. இராமாயணத்தில் சாயுவைப் பற்ரிச் சொல்லும்பொழுது அந்த ஆறு, “போதவிழ் பொய்கை தோறும் புது மணல் தடங்கள் தோறும் “பாய்ந்த்து என்று கம்பர் பாடுகிறார். பொய்கை , தடம் என்பவை இரண்டும் குளங்களைக் குறிப்பனவாக இருக்க இரண்டு முறை சொல்வானேன்?
பொய்கை என்பது மனிதர் ஆக்காத நீர் நிலை.தடம் என்பது மனிதர் வெட்டிய குளம் ,தடாகம் என்ற வட சுல் தடம் என்று தமிழில் வந்தது .
8. கவந்தனுடைய வரலாறு யாது?
டஹ்னுவென்னும் யட்சனுடைய மகனாகிய இவன் ஸ்தூல சிரஸ் என்னும் முனிவன் இட்ட சாபத்தால் அரக்கனானான். பிரமன் அருளால் தீர்க்காயுள் பெற்று இந்திரனோடு பொருத போது அவன் இவனை வஜ்ராயுடஹ்த்தால் தலையில் அடித்தான் . அப்பொது இவன் தலை வயிற்றுக்குள் அழுந்தியஹ்டு.அதனால் கபந்தன் என்று பெயர் பெற்றான் . கபந்தம் – தலையற்ற உடல் . இவனை இராமபிரான் அழித்தான் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக