வெள்ளி, 15 செப்டம்பர், 2017

பயப்படாதீர்கள் --- கி.வா.ஜ
பழந்தமிழ் நூல்களைப் பற்றித் தொடர்சியாகப்  பிரசங்கங்கள் செய்து வரவேண்டுமென்று மயிலாப்பூர் இந்திய இளைஞர் சங்கத்தினர்  ஒரு முறை கேட்டுக் கொண்டனர்.
எழுத்ததிகாரம் , சொல்லதிகாரம் , பொருளஹ்டிகாரம் என்ற மூன்று அதிகாரங்களிலுள்ள செய்திகளையும் இவ்வாறு பார்த்துத் தொகுத்துப் பேசியபோது , கேட்ட அன்பர்கள் , நான் பேசியதில் விளங்காத கருத்து ஒன்றும் இல்லை என்று சொன்னார்கள். அப்பிரசங்கங்களை எழுத்துருவத்தில் அமைக்க வேண்டும் என்றும் சில அன்பர்கள் கூறினார்கள்.
இப்புத்தகத்திலுள்ள செய்திகளிற் பெரும்பாலான தொல்காப்பிய மூலத்தைப் பின் பற்றியே எழுதப் பெற்றன. சில இடங்களில் நச்சினார்க்கினியருடைய உரையைத் தழுவிய செய்திகள் வருகின்றன. ‘யாவரும் தெரிந்து கொள்வதற்கு உரிய செய்திகள் அதில் உள்ளன’ என்று இதைப் படிப்பவர்கள் உணர முடிந்தால் , இந்த முயற்சி வெற்றி பெற்றது என்ற ஆறுதலை அடைவேன்; பார்க்கலாம்
                                                                                                கி.வா.ஜகந்நாதன்.
தமிழின் பழமை----   கி.வா.ஜ
உயிர்த்தொகுதியில் மனிதன் சிறந்தவனாக இருக்கிறான் .பகுத்தறிவு இருப்பதனால் கண்ணால் கண்டும் , காதால் கேட்டும் , பிற பொறிகளால் உணர்ந்தும் தெரிந்து கொண்டவற்றை வேறுப்பிற மொழிகளால் அறிந்து பிரித்து அறிந்தும் , மறவாமல் நினைந்தும்,  தொடர்பு படுத்திச் சிந்தித்து வாழ்கிறான் . இந்த ஆற்றல் மாட்டுக்கு இல்லை; எறுப்புக்கு இல்லை.
            மற்றொரு முக்கியமான வேற்றுமையைப் பிராணிகளிடத்திலே பார்க்கிறோம் . வாயில்லா ஜீவன்களாகிய  விலங்கினங்களுக்குப் பேசத் தெரியாது. மனிதன் பேச்சென்னும் அற்புதமான வரத்தைப் பெற்றிருக்கிறான் . ‘விலங்குகளுக்கும் பாஷை உண்டு. ஒவ்வோர் இனத்துக்கும் ஒரு பாஷை இருக்கிறது.’ என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதில் உண்மையும் உண்டு. ஆனால் அந்தப் பஷை பச்சைக்குழந்தையின் பாஷை போன்றது. சிலவகை ஒளிகளுக்குள்ளே உணர்ச்சிகளை  வெளியிடும் பாஷை  அது. அழுகை, சிரிப்பு, ஹூம்  என்று சொல்வது –இவ்வாறு உள்ள ஐந்தாறு ஒலிகளே  குழந்தையின் வாக்கிலிருந்து உண்டாகும் பாஷை; அது போலவே விலங்கினங்களின் பாஷை இருக்கிறது என்று சொல்லலாம் .
மனிதனுடைய பாஷையோ அவனது உள்ளக் கருத்தைத் தெளிவாகச் சொல்லும் கருவியாக இருக்கிறது.பல மனிதர்கள் தமக்குள்ளே அமைத்துக் கொண்ட வரையறைக்குள் அடைங்கி ஒரு பொதுமைப் பண்பைப்  பெற்றுருக்கிறது. தேசத்தின்  வட கோடியில்  உள்ள குழந்தை கல்லைக் கல்லென்கிறது. தென் கோடியில் உள்ள கிழவனும் அதைக் கல்லென்றே சொல்கிறான் .இது இயற்கையகவே அமைந்த நியதியைப் போலத் தோன்றும் கட்டுப்பாடு. இதனால்தான் பாஷையின் உபயோகம் அதிகமாகிறது.இந்தப் பொதுக் கட்டுப்பாடு  இல்லாவிட்டால் , வீட்டுக்கு ஒரு பாஷையாக , குடும்பத்துக்கு ஒரு பாஷையாக பாஷைகள் முளைத்திருக்கும் . பலருக்குப் பயன்படாமையால்  அவை சில காலம் இருந்து மறைந்து போயிருக்கும் .
இன்ன பொருளை இன்ன ஒலியினால் குறிப்பது என்ற   வரையறையை உணர்ந்து, அப்படியே ஒருவரைப் போலவே பிறரும் வழங்கி வந்ததனால் தான் பாஷையானது பல இடங்களுக்குப் பரவிப் பல காலமாக நிலவி வருகிறது. ஓர் இன மக்கள் தம்முடைய முயற்சியினால் உலகத்தில் பல இடங்களுக்குச் சென்று வாழத் தொடங்கினால் அவ்வினத்தோருக்குரிய மொழி அதிகமாகப் பரவுகிறது. இன்று ஆங்கில மொழி உலகத்திலே பல இடங்களிலே பரவியிருப்பதற்குக் காரணம் , அந்த மொழியினிடம் மக்களுக்கு விருப்பம் அன்று; அதனைப் பேசும் இனத்தார் தம் முயற்சியைப் பல நாடுகளிலும்  பரப்பி ஊன்றிக் கொண்டதுதான் காரணம் .
            பாஷை முதலில் மனிதனின் அன்றாட வாழ்வுக்கு உபயோகப்படும் கருவியாகவே தோன்றியது. அற்றைக் கூலி பெற்று வாழும் தொழிலாளி ஒருவன் நாளடைவில் பணத்தைச் சேமித்து வைக்கிறான் .அது போலப் பாஷையில் தினந்தோறும் உபயோகப் படாத சேமிப்பு நிதி ஒன்று திரண்டது.ஓடி, ஆடி தொழிலும் வியாபாரமும் செய்து வாழும் வாழ்க்கையில் அவசியமாக இருக்கும் பாஷைக்குப் புறம்பே , பழமையையும் , புதுமையையும் நினைக்கவும் , சிந்திக்கவும் பயன்படும் ஒரு பகுதி தோன்றலாயிற்று.சிந்தனா லோகத்தில் அந்தப் பகுதி வளர்ந்தது. அதுதான் இலக்கியம் . மனிதன் தினந்தோறும் சோறும் , நீரும் உண்கிறான் . பாயசமும் , பட்சணமும் விழாக்களில் உண்ணுகிறான். அவ்வாறே பாஷையில் இலக்கியம் வந்தது. மனிதன் வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க நிழல் தேடியது ஆரம்பக் காலக் கதை. பிறகு அவன் மாட மாளிகை கூட கோபுரங்களைக் கட்டினான் .இலையாலும் தழையாலும் உடை உடுத்து மானத்தைக் காப்பாற்றியது போய் சித்திரத் தூசம் , செம்பொன்னாடையும் புனையலானான் . அவன் பேசிய தாய் மொழியிலும்  இப்படியே அவனது கருத்து வளம் பெறப் பெற இலக்கியங்கள் வளர்ந்தன.
            ஒரு பாஷையைப் பேசும் மனித சமுதாயத்தினர் நெடுக்காலமாக   வாழ்ந்தாலும் , உயர் நிலையில் வாழ்ந்தாலும்  அவர்களுடைய தாய் மொழியில் இலக்கியங்கள் பெருகும் . உயர் நிலையில் வாழும் மக்களால் பேசப் பெறாமையால் , இன்னும் இலக்கியம்  காட்டு மிராண்டிகளின் தாய்மையாக நிற்கும் மொழிகள் பல உலகத்தில் இருக்கின்றன. மனிதனது வாழ்க்கையில் அடிப்படையாக உள்ள உணர்ச்சிகளையும் செயல்களையும் குறிக்கும் வார்த்தைகளும் , வாக்கியங்களும் அந்த   மொழிகளில்   இருக்கலாம் . அம்மக்கள் கட்டிக் கொண்டு வாழும்  தழைக் குடில்களைப் போல , அவர்கள் உண்டு வாழும் ஊனையும் , பழங்களையும் போல, அந்த மொழிகள் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவாகிச் சுருக்கமாக உள்ளன. அவர்கள் ஊரில் மாட மாளிகைகள் இல்லை.அவர்கள் உண்ணும் உணவில் அல்வா இல்லை; அவர்கள் ஆடையில் சரிகை இல்லை; அவர்கள் பாஷையில் இலக்கிய வளம் இல்லை.
            பல காலம் நல் வாழ்வு வாழ்ந்த மக்களின் தாய் மொழியோ இலக்கிய வளம் பெற்று விளங்கும் .  தமிழ் மொழி பல காலும் வாழ்ந்து வரும் மனிதக் கூட்டத்தினரின் தாய் மொழி; மிக நன்றாய் வாழ்ந்த மக்களின் மொழி; ஆதலின் நிச்சயமாக இதில் இலக்கிய வளம் சிறந்து நிற்கத்தான் வேண்டும் . தமிழனது வாழ்வின் உன்னத நிலையை  அவன் கட்டிய கோபுரங்கள் காட்டுகின்றன. அவன் உண்ணும் அறுசுவை உண்டி புலப்படுத்துகிறது. அவன் பூணும் அணிவகை தெளிவாக்குகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக  அவன் பேசும் மொழியில்  உள்ள நிதிகளாகிய இலக்கியங்கள் காட்டுகின்றன.
            மனித இன ஆராய்ச்சியாளரில் சிலர் ஆதி மனிதன் தமிழ் நாட்டிலே தோன்றினான் என்று கூறுகின்றனர். ‘ தமிழனுடைய  அங்க அமைப்பு இன்று நேற்று உண்டானதல்ல, பல காலமாக ,பல ஆயிரம் ஆண்டுகளாக அவன் தலையும் மூக்கும் , வாயும் ,முகமும் பண்பட்டுப் பண்பட்டு இன்றைய நிலையை அடைந்திருக்கின்றன. ‘ என்பது அவர் கூறும்  செய்தி. உருவம் காலங்கண்ட பழமையைக் காட்டுவது உண்மையாக இருந்தால் , அவன் தாய் மொழியும்  அவனோடு நெடுங்காலங்கண்ட பழமையுடையதென்றே சொல்ல வேண்டும் .
இன்று உலகத்தில் உள்ள    மொழிகளுக்குள்ளே மிகப் பழமையான   மொழிகளுக்குள் தமிழ் ஒன்று என்பதை மொழி நூல் வல்லவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.
தமிழர் தமக்குள்ளே வழங்கும் கதைகளிலிருந்து பழமையை ஒருவாறு ஊகிக்க முடியும் . சிவபிரான் தமிழை உண்டாக்கினார். என்று புராணம் சொல்கிறது அதனூடே உள்ள உண்மையை நாம் உணரவேண்டும் . சரித்திரத்தால் தொடப்படாத காலத்திலேயே, சிருஷ்டியோடு சேர்ந்து படைக்கப்பட்டதென்று தோன்றும்படியான  பழமையுடையதுதமிழ் என்பதைத் தான் இந்தக் கதை சொல்வதாகக் கொள்ள வேண்டும் . சைவர் சிவன் தந்ததாகச் சொன்னால்  பௌத்தர் அவலோகிதன் தந்ததாகக் கூறுவர். எல்லோரும் , தெய்வத்தால் , அமைக்கப்பட்டது இது  என்றே சொல்கிறார்கள். அந்தக் கதை  தமிழின் தெய்வத்தன்மையைக் குறிப்பதாகக் கொள்வதைவிட , அதன் பழமையைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தமாகும் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக