சனி, 9 செப்டம்பர், 2017


என் புத்தகங்கள்.---கி.வா.ஜ –பகுதி 3
சில மகானுபாவர்கள் புத்தகம் வைத்திருக்கிறார்கள். வாங்கின மேனிக்கு அப்பழுக்கு இல்லாமல் அப்படியே இருக்கும் . உள்ளே பிரித்துப் படித்துப் பார்த்தால்தானே? பழைய காலத்திலேயே என் புத்தகங்கள்.---அதாவது ---அதாவது அழகழகாகப் பைண்டு செய்த புத்தகங்கள் இல்லாமல் ஓலைச் சுவடிகள் இருந்த காலத்திலேயே – இப்படிப்பட்ட புத்தகம் காத்த பூதங்கள் இருந்தன என்று தெரிகிறது.
            “புத்தகமே சாலத்
                        தொகுத்தும் பொருள் தெரியார்
             உய்த்து அகம் எல்லாம்
                        நிறைப்பினும் மற்று அவற்றைப்
             போற்றும் புலவரும்
                        வேறே, பொருள் தெரிந்து
             தேற்றும் புலவரும் வேறு “---
என்று நாலடியாரில் ஒரு பாட்டு வருகிறது. வீடு முழுவதும்  புத்தகங்களை நிறைத்து வைத்துப் பூட்டி வைக்கிற புலவர்களும்  இருந்தார்களாம் ! அந்த காலத்திலேயே .அப்படியானால் இந்தக் காலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டாம்.
            சில பேர் கௌரவத்துக்காகப் புத்தகங்களை வாங்கி வைத்திருப்பார்கள்.இன்ன புத்தகம் தம்மிடத்தில் இருக்கிறது என்பது கூடத் தெரியாது. நூலுக்குள்ளே என்ன இருக்கிறது என்றும் தெரியாது. , யாராவது ஏதாவது கேட்டால் தம்மிடம் இல்லை என்று  சொல்லி விடுவார்கள். ஏதாவது சுவையான கருத்து இந்த  நூலில் இருக்கிறது  என்று யாராவது சொல்லும்போது அதை முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசை சிலருக்கு உண்டாகும் . முன்னே பின்னே புத்தகத்தைப் புரட்டிப் பார்த்திருந்தால்தானே தெரியும் ? அப்போதைக்குப்போய் புத்தகத்தைத் துருவினால் இருக்குமிடம் தெரியுமா?
            அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முன்பு சேது சம்ஸ்தான வித்துவான் மகாவித்துவான்  இரா. இராகவையங்கார்  ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு உதவியாகச் சிலர் இருந்தனர். அவருள் எம்.ஏ. பட்டம் பெற்ரவர் ஒருவர். ஒரு நாள் மகாவித்துவான் எதையோ ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த போது அந்த எம் . ஏ யைப் பார்த்து  “ அழற்படு காதை எடுத்துக் கொண்டு வா” என்றார். எம். ஏ. நூல் நிலையம் சென்றார்.சென்றவர் நெடு நேரமாகியும் வரவில்லை. பிறகு வந்தார். “ எங்கே புத்தகம்?” என்று கேட்டார் மகா வித்துவான் . “ அழற்படுகாதை என்ற புத்தகம் நூல் நிலையத்தில் இல்லை.நெடுகத் தேடிவிட்டேன்”என்றார் . கேட்ட புலவர் பெருமானுக்குக் கோபம் வந்துவிட்டது. “அட முட்டாள்! சிலப்பதிகாரம் இங்கே இல்லையா?” என்று கத்தினார்.
            பாவம் அந்த எம்.ஏ.க்கு  அழற்படு காதை என்பது சிலப்பதிகாரத்தில் உள்ள காதை என்று  தெரியவில்லை. அவருக்கே தெரியவில்லையென்றால் , புத்தகத்தை வாங்கி வைத்திருக்கிறவர்களுக்குக்  காட்டுவதோடு நிற்கும்  பெருமக்களுக்கு என்ன தெரியப் போகிறது?
            நன் படித்துக் குறிப்பு எடுத்த புத்தகத்தை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வருகிறதில்லை. கேட்கிறவர்களுக்குக் கொடுக்கவிட்டால்  அவர்கள் என்னைப் பற்றித் தவறாக நினைக்கக் கூடும் . சிலருக்குப் புத்தகங்களைக் கொடுத்துத் திரும்பி வராமல் இழந்திருக்கிறேன். அந்தப் புத்தகங்களைப்போல ஆயிரம் புத்தகங்களைக்  கடையில் வாங்கிக் கொள்ளலாம் . புத்தம் புதிய பதிப்பே கிடைக்கும் . ஆனாலும் என் கைப்பட்ட என் சொந்தப் புத்தகத்தில் குறித்திருக்கும் அடையாளங்களை, செய்திருக்கும் திருத்தங்களை , குறித்திருக்கும் சிறு குறிப்புகளை, நான் விலை கொடுத்து எங்கே வாங்க முடியும் ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக