திங்கள், 18 செப்டம்பர், 2017

                           பார்க்காத பார்வை
                வாகீச கலாநிதி திரு கி.வா. ஜகன்னாதன்


கண்ணிற் சிறந்த உறுப்பில்லை “   என்று பழம் புலவர் சொன்னதற்கு  வியாக்கியானமே வேண்டியதில்லை. உலகம் முழுவதும் கண் உடையவர்களாலே பெரு வளம் பெறுகிறது. நமக்கு அருமையான மனிதர்களைக் கண் என்றும் கண்மணி என்றும் பாராட்டிப் பேசுகிறோம்உயிர் மிகவும் அருமையானது; அதற்கு அடுத்தபடியாக அரிய பொருளாக நிற்பது கண்.
            அவ்வளவு உயர்வாகக் கருதுவதற்குரிய கண்ணைக் கூட மட்டமாக்கி விடும் ஒன்று மனிதனிடம் இருக்கிறது. இந்தக்  கண்ணை அகக் கண்  என்று  கூறுவது  வழக்கம். புறக்கண்ணாலே மாத்திரம் பார்க்கும் பார்வை ,விலங்குகளுக்கும் இருக்கிறது. மனிதன் உயர் திணை ஆயிற்றே! அவன் அகக் கண்ணைக் கொண்டு பார்க்கத் தெரிந்தவன் ஆதலால் அவனுக்கு அந்தப் பெருமை வந்தது. முகத்திலே உள்ள கண்கள் உருவம் உள்ள பொருளைத்தான்  பார்க்கும் . நிறமும் , வடிவும் எப்படி உள்ளன என்று தெரிந்து கொள்ளும். அதற்கு மேலே பார்வை செல்லாது. புற வாயிலிலே நின்றுவிடும் பார்வை முகக் கண்ணால் பார்க்கும் பார்வை. புறத்தைக் கடந்து அகத்துள்ளே சென்று பார்க்கும் பார்வை ஒன்று உண்டு. அதையே அகக் கண் என்றும் அறிவு என்றும் சொல்வார்கள்.
            “ எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
             மெய்ப்பொருள் காண்ப தறிவு

            “  எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
              மெய்ப்பொருள் காண்ப தறிவு    என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

புலன்களால் உலகில் உள்ள பொருள்களின் தன்மையை உணர்கிறோம்.புலனுக்குத் தட்டுப்படும்  அந்தத் தன்மையை மாத்திரம் கொண்டு அதன் இயல்பை மெய்யென்று நினைத்து விடக் கூடாது.
            பாம்பு படம் எடுக்கிறது. அந்தப் படம் கண்ணாடியைப் போல பள பள வென்று அழகாக இருக்கிறது. கண்ணினாலே பார்க்கின்ற பார்வைக்கு அழகாகத் தோன்றுவதனால் அந்தப் படம் நல்லது என்று சொல்லலாமாபுறக் கண்ணாலே கண்ட அளவிலே நின்றுவிட்டால் அழகான கண்ணாடியைச் சட்டென்று கையிலே எடுப்பது போல், அந்தப் பாம்புப் படத்தையும் பற்றத்தான் தோன்றும் . குழந்தை அப்படித்தானே செய்யும்? ஆனால் நாம் ,”ஐயோ பாம்பு !”  என்று அலறுகிறோம். ஏன்? புறக்கண்ணாலே பார்க்கும் பார்வைக்குப் பிறகும் மற்றொரு பார்வை நமக்குப் பயன்படுகிறது . அந்த அழகிய படத்தில் உயிரைக் கொல்லும் நஞ்சும் இருக்கிறது என்பதை அந்தப் பார்வை சொல்கிறது.  “ நாகப் பாம்பு அழகிய படம் உடையதாக இருந்தாலும் , கொல்லும் நஞ்சையுடைய பிராணிஎன்று நம்முடைய அகக் கண்ணாகிய அறிவு விளக்குகிறது. ஆகையால் கண்ணாலே கண்ட பொருள் பள பளப்பாகத் தோன்றினாலும் , அது உயிரைப் போக்கும் தன்மையுடையது என்ற உண்மையை உணரச் செய்வது அறிவு.  “ எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவர் வாக்குக்கு இப்போது ஒருவாறு பொருள் தெரிந்துவிட்டது. கண்ணாலே கண்டதோடு நில்லாமல் கருத்தாலும் காணத் தெரிந்தால் அவன் அறிவாளி என்று சொல்லலாம்  இந்த  அறிவு மிக மிக அணுகிச் சென்றால் அவனைச் சிறந்த அறிவாளி என்று சொல்ல வேண்டும் . இந்தப் பார்வை புறக் கண்ணால் பாராத பார்வை. இதனால் பார்ப்பது மிகவும் இன்பத்தைத் தருவதென்றே திருமூலர் சொல்கிறார். உண்மையை உணர்ந்தவனுக்கு உண்மை இன்பம் பிறக்கும் .
           
                        “ முகத்தில் கண் கொண்டு பார்க்கின்ற மூடர்காள் !
                          அகத்தில் கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம் “    

சீதாப் பிராட்டியைத் தேடிக்கொண்டு அநுமன் இலங்கைக்குப் போனான் . அந்த ஊரெல்லாம் தேடப் புகுந்தான் .இரவு நேரத்தில்  புகை புகா வாயிலெல்லாம் தேடினான். சீதாதேவியைக் கண்டான் இல்லை. இராவணனுடைய அந்தப்புரத்திலே நுழைந்தான். அங்கே இராவணனிடம் காதல் கொண்டு வாடிய பல மடந்தையரைக் கண்டான். பிறகு மயன் மகளும் , இராவணன் மனைவியுமாகிய மண்டோதரி உறங்கிக் கொண்டிருந்த மாடத்துக்குச் சென்றான்.
அங்கே மண்டோதரியைக் கண்டான். அவளுடைய பேரழகையும் , அமைதியையும் கண்டபோது அவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. “ இவள்தான் சீதையோ?என்று சற்று நேரம் திகைத்துப் போனான் . மணி விளக்கங்களெல்லாம் மழுங்கும்படியாகத் தன் மேனி ஒளி தழைப்புற்று விளங்கத் துயில் புரிகின்ற  மண்டோதரியை அநுமன் கண்டு ,          ” இவள் ஜானகியோ?” என்று ஐயுற்று உயிரிலே அக்னி பற்றினாற் போல் வருத்தத்தை அடைந்தான்  என்று கம்பர் சொல்கிறார்.

                  “ இன்ன தன்மையின் எரிமணி விளக்கங்கள்
                         எழில்கெடப் பொலிகின்ற

               தன்ன  தின்னொளி தழைப்புறத் துயில்வுறு தையலைத் தகைவில்லான்
               அன்ன ளாகிய சானகி இவளென
                         அயிர்த்தகத்  தெழுவெந்தீத்
                துன்னும் ஆருயிர் உடலோடு சுடுவதோர்
                         துயருழந் திவை சொன்னான்.” ------
அநுமன் அதற்கு முன்னாலே சீதையைப் பார்த்ததில்லை.இராமனிடம் விடை பெற்றுக் கொண்டபோது அவன் சீதையின் அங்க அடையாளங்களைக் கேட்டுக் கொண்டு வந்தான். அத்தனை மகளிர் கூட்டத்திலும் மண்டோதரி அழகியாகவும் உயர்வுடைவளாகவும் தோன்றினாள். கண்ணினால் பார்த்த அளவிலே அந்தப் பார்வை சீதையோ என்ற ஐயத்தை உண்டாக்கிவிட்டது. அதனால் அளவற்ற துக்கத்தையும் அடைந்தான்.
           
“ நான் இந்த உலகத்திலே பிறந்த பிறவி வீணாய்விட்டது” என்று மனமுடைந்து அழுங்கினான். “ இவள் சீதையாக இருந்தால் இராமன் புகழ் தொலைந்தது; அவன் பெருமை தொலைந்தது ; நானும் தொலைந்தேன் ; இந்த இலங்கையும் தொலைந்தது; இராட்சசர்களும்  அடியோடு தொலைந்தார்கள். “ என்று நைந்து சாம்பினான் .

அநுமன் முகக் கண் மாத்திரம் கொண்டு பார்க்கிறவனாக இருந்தால் , இந்தத் துயரக் கடலிலே  அமிழ்ந்திருப்பான். ஆனால் அவன் அகக் கண்ணாலே பார்க்கும் பார்வையைப் பெற்றவன்.  நோக்காமல் நோக்குபவன். கண்ணை நம்பி ஆராய்வதோடு நில்லாமல் , கருத்தையும் கலந்து ஆராய்பவன். இதைக் கம்பர் சொல்கிறார்,

                        “கண்டு கண்ணோடு கருத்தோடு கடாவினன்”-----

            கண்ணோடு கடாவியபோது   அவன் ஐயத்திலும் துயரத்திலும் ஆழ்ந்தான் . மேலே கருத்தோடு கடாவினான்.; அப்போதுதான் உண்மை புலனாயிற்று.
           
“ சீதை மனிதத் திருமேனி படைத்தவள். இவள் வேறு இயல்பு கொண்டவள். யக்ஷ சாதியோ, ராட்சச சாதியோ தெரியவில்லை!.  தவிர  இராமபிரான் மேல் உள்ளம்  சென்ற காதலையுடைய பெண்டிருக்கு , மன்மதனாக இருந்தாலும் அவ்வுள்ளம் பிறன்பால் செல்லுமோ?” என்ற பார்க்காத பார்வை உதயமாயிற்று. மேலே இன்னும் சில காரணங்களை ஆராய்ந்து உண்மையை உணர்ந்து கொண்டான் .

அவன் பார்த்த பார்வையைக் காட்டிலும் பாராத பார்வையே உன்மையைத் தெளிவுறுத்தியது.

இப்படி ஒரு பார்வை உண்டு என்பதை இலக்கியப் புலவர்கள் உணர்ந்து பல இடங்களிலே சொல்லியிருக்கிறார்கள். அந்தப்பார்வை கண்ணாலே பார்ப்பது அன்று என்பதையும் குறிப்பாகத் தெரிவித்திருக்கிறார்கள். இலக்கணப் புலவராகிய தொல்காப்பியரும் இந்தப் பார்வையைப் பற்றிச் சொல்கிறார். “ நோக்கல் நோக்கம்” என்று அவர் இதனைக் குறிக்கிறார். “நோக்கு அல்லாத நோக்கம் “ என்று அதை விரிக்க வேண்டும் . “ பார்வை அல்லாத பார்வை “ என்பது பொருள் .

“ நோக்கப் பொருண்மை நோக்கிய  நோக்கமும் , நோக்கல் நோக்கமும் என இரண்டு வகைப்படும் ; நோக்கிய நோக்கம் கண்ணால் நோக்குதல் ; நோக்கல் நோக்கம் மனத்தால் ஒன்றனை நோக்குதல்” என்று சேனாவரையர் இதை விளக்குகிறார்.

‘பார்த்தல் என்ற மாத்திரத்தில் கண்ணாலே பார்ப்பதுதான் ஞாபகத்துக்கு வரும். நோக்குதல் இல்லாத நோக்கம் ஒன்று உண்டு என்பதை இந்தத் தொடர் நினை வுறுத்துகிறது. இலக்கியங்களில் நோக்குதல் என்ற சொல் வரும் இடங்களிலெல்லாம் கண்ணாலே பார்த்தல் என்ற பொருள் கொண்டு , அங்கே கண் எங்கே என்று தேடக் கூடாது. கருத்தினாலே கருதுவதையும் நோக்கு என்று சொல்வதுண்டு. அந்த நோக்கு , நோக்கு அல்லாத நோக்கு; பார்க்காத பார்வை

 “ வான் நோக்கி வாழும் உயிர் எல்லாம்
   கோல் நோக்கி வாழும் குடி “ –

என்ற குறளை , இந்தப் பார்க்காத பார்வைக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிறார்கள் உரைகாரர்கள்.

“ உயிர்களெல்லாம் வானத்தைக் கண்களால் அண்ணாந்து பார்த்துக் கொண்டு வாழும் “ என்று அர்த்தம் செய்யலாமா? “ வானில் உண்டாகும் மழையாகிய பயனைக் கருதி , அது கிடைக்கும் என்று நம்பி உயிர்கள் உலகத்தில் வாழும் “ என்று பொருள்கொள்வதுவே முறை. இங்கே நோக்கும் என்ற சொல் இருந்தாலும் அது கண்ணாலே பார்க்கும் பார்வையைக் குறிப்பது அன்று; நோக்கல் நோக்கமாகிய , பார்க்காத பார்வையையே குறிக்கும் .


  
                        ‘

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக