ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

மயில் மேல் வந்த வாழ்வு –கி.வாஜ
கண்ணைக் குளிர்விக்கும் மேகங்கள்  நீல வானத்தின் மீது கப்பிக்கொண்டு பரந்து விரிந்திருந்தால் மன்னுயிர்களுக்கு எத்தனை ஆனந்தம் உண்டாகிறது! மனிதர்களுக்கு உணவை உண்டாக்கித் தானும் உணவாகும் நீரைப் பொழியும் அம் மேகங்கள் அவர்களுடைய உள்ளத்தையும் குளிர்விக்கின்றன.நிலமகள் மேனி குளிர்கிறது. பச்சைப் பசும்புல் நிலப்பரப்பெல்லாம் ‘குபீர்’ என்று முளைத்த போது புவிமகள் மழையின் ஸ்பரிசத்தால் புளகாங்கிதம் அடைந்து விட்டவளைப் போல அழகு பொலிந்து நிற்கிறாள். அது மட்டுமா? மரங்களெல்லாம் தளிர்த்துப் பூத்து வானளாவ நிமிர்ந்து ஆடையாபரணம் புனைந்த மணமகளிர்களைப் போல  நிற்கின்றன. இயற்கைத் தேவியின் புதுப்பொலிவிலே ஒரு தனி அழகு குலுங்குகிறது. அந்த அழகிய தோற்றத்துக்கு  மூலகாரணம் எது ? மழை! மழையைப் பொழிவது மேகம் .
            மேகத்தின் இடியைக் கேட்டு நாகங்களெல்லம் அஞ்சுகின்றன. ஆனால் காட்டிலே உள்ள மயில் தன் தோகையை விரித்து ஆனந்தக் கூத்தாடுகிறது. உலகத்துக்கே உயிரை அளிக்கும்  மேகத்தைக் கண்டு அதன் உள்ளம் குளிர்கிறது போலும் ! உலகம் உவக்கும் களிப்பிலே அதற்கு ஒரு குதூகலம் . மகாத்மாக்கள் உலகம் களித்தால் தாமும் களிப்பார்களாம் . மயிலும் ஒரு மகாத்மா. ஆம்! மழை நீரிலே தன் தோகையெல்லாம்  நனைந்து குளிரால் நடுங்கும் நிலை வருமென்று அது பயப்படுகிறதா? இல்லை. மேகத்தைக் கண்டால்  இந்த விரிந்த உலகத்துக்கே தனிப் பிரதிநிதி போல  நின்று வரவேற்கிறது. வாழ்த்துகிறது. களி நடம் புரிகிறது.
            இப்படி உலகம் களிக்கும் பருவத்திலே தன் பசுந்தோகையைப் பரப்பி ஆடும் மயிலைக் காணும் பொழுது  அழகெல்லாம் திரண்டு ஓருருவமாகி வந்து நிற்பது போலத் தோன்றுகிறது. அதன் தோகை அழகுக் குவியல் . அத் தோகையிலே பளபளக்கும் கண்கள் அழகுத் துணுக்குகள்.அந்தப் பீலியில் உள்ள ஒவ்வொரு மயிர்க்காலும் அழகின் ரேகை. மயிலின் வளைந்த கழுத்திலே கலையழகு பொங்குகிறது. அதன் சாய்ந்த பார்வையிலே  மோகன எழில் கொஞ்சுகிறது.ஒற்றைக் காலைத் தூக்கி  நடனம் புரிகையில் அழகு துளும்பிக் கூத்தாடுவது போல் இருக்கிறது.
            இவ்வாறு அழகுக் கோலமாக நிற்கும் மயிலுக்கு மேல், அந்தப் பச்சைப் பசு நிறப் பரப்பினிடையே ‘ செக்கச் செவே’லென்று பேரழகு வீற்றிருக்கிறது. பவளம் போன்ற சிவப்பு உருவம் .அந்தப் பச்சைப் பரப்பிலே பதித்து வைத்த செம்பவளத்திரள், நம் உயிரையே மயக்கி நிற்கிறது.அழகு! அழகு!! அழகு!!! அந்தச் செம்மேனிச் சுடர் வெறும் அழகாக மாத்திரம் இல்லை . அதில் அழகு இருக்கிறது, ஒளியிருக்கிறது, தண்மையும் இருக்கிறது.
                நீல மயில் மேல் இந்த அழகொளி வரும்போது நாம் குதூகலிக்கிறோம் . முதலில் மயிலைக் கண்டாலே நமக்கு நாகத்தின் பயம் இல்லை. விஷம் நம்மை அணுகாதென்ற தைரியம் வருகிறது. இனி அமுது வாழ்வு வாழலாம் என்ற் நம்பிக்கை பிறக்கிறது. வெறிச்சென்று கிடக்கும் கானல் நீரையும் , விகார உருவங்களையும் கண்டு காந்திப் போயிருந்த கண்களுக்கு அந்த நீல மயில் ஒரு குளிர்ச்சியை உண்டாக்குகிறது. கருத்திலே ஓர் ஆனந்தம் ஊறுகிறது, அதோடு நின்றுவிடவில்லை. மேலும் மேலும் நாம் இன்பக் களியாட்டை அடைகிறோம் . அதன் நடுவிலே தோன்றும் செவ்வொளிப் பிழம்பு நம் கண்ணிலுள்ள இருட் படலத்தைப் போக்கி விடுகிறது. வெம்மை நீங்கிய கண்கள் மயக்கமும் நீங்கி ஒளிப்பார்வை பெறுகிறது. இன்பமும் அறிவும் அமைய நாம் வாழ்வு பெறும் அறிகுறிகள் உண்டாகின்றன. அந்தச் செவ்வொளியின் முன் நம்மைப் பார்க்கிறோம் . நம் சிறுமை தெரிகிறது. “ அடடா! அந்த ஒளியோடு கலந்து மறைந்து போகவேண்டும் “ என்ற நினைவு வருகிறது. நீலங்கொள் மேகத்தைப் போன்ற மயிலின் மீது அந்த செங்கதிர் மேனிப்பொருள் தோற்றுகையில் விளைந்த இந்த ஞானோதயத்தை அருணகிரிநாதர் பாடுகிறார்.
            மெல்லியலாகிய பேதைப்பெண் ஒருத்தி நீல மயில் வாகனக் கடவுளைக் கண்டு ஆசைப் படுகிறாளாம் . ஆத்மா முருகக் கடவுளாகிய பரமாத்மாவைக் கண்டு  பேரின்பத்தை அடைய விரும்பும் காதலை  அந்த மாதிரி ஜோடனை செய்து காட்டுகிறார் அந்த மெய்ஞானி.
                நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
                நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
                 மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
              மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே

                வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
                  வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
                 நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
              நானென்று மார்தட்டும் ...... பெருமாளே                

 ‘ நீல நிறம் பொருந்திய மேகத்தைப் போன்ற மயிலின் மீது நீ வந்த கோலத்தைக் கண்டு காதல் கொண்ட இந்தச் சிறு பெண்ணுக்கு உன்னுடைய திருமார்பிலே விளங்கும் மாலையைத்  தந்தருள்வாய் ! ‘ என்று தோழி ஆண்டவனை வேண்டுவதாக  அமைந்திருக்கிறது இந்தப் பாட்டு.
            ‘உலகின்  மாயாவிகார வெம்மையைப் போக்கி ஆணவமலமென்னும் விஷத்தைப் பறக்கச் செய்து அருளாகிய தோகையை விரித்து  உயிர்களுக்கெல்லம் நிழல் கொடுக்கும் தன்மை வாய்ந்த ஓங்கார ஸ்வரூபமான மயிலின்மீது , ஞானமே திருமேனியாகவும் , குறைவிலா நிறைவாகிய செம்மையே நிறமாகவும் பெற்ற  முருகப்பிரான் வரும் அநுக்கிரக அவசரத்தைக் கண்டு , நமக்கும் இவன் அருள்செய்வான் என்று கருதிக் காத்துக் கிடக்கும் பக்குவ ஆன்மாவுக்கு  ஆண்டவன் திருவருள் கிடைக்க வேண்டும் ‘ என்ற கருத்தை இந்த உருவத்திலே சொல்லுகிறது இந்தப் பாட்டு .
            மேலாகப் பார்த்தல் அழகும் , ஆழ்ந்து பார்த்தால் அறிவும் புலப்படும் , இந்தப் பாட்டில் கவிச்சுவையும் , கருத்தாழமும் ஒருங்கே ததும்பி நிற்கின்றன.                
           


1 கருத்து:

  1. மயிலின் அழகும் அதன் மேல் அமர்ந்திருக்கும் முருகனின் அழகும் உள்ளத்தைக் கொள்ளை கொள்வது குறித்து ஆசிரியர் எழுதியிருப்பது நம் மனத்தைக் கொள்ளை கொள்ள வைக்கிறஹ்டு . திருப்புகழ் பாடலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு