புதன், 4 மார்ச், 2015

       வாகீச கலாநிதி திரு கி.வா.ஜகன்னாதன்.  ( கி.வா.ஜ )
விசுவாச வருடம் பங்குனி மாதம் சனிக்கிழமை , 29ஆம் தேதி அதாவது ,  11-4-1906 இரவு கும்ப லக்ன , அனுஷ நட்சத்திரத்தில் திரு வாசுதேவ ஐயருக்கும், பார்வதி அம்மாள் அவர்களுக்கும் மகனாகப் பிறந்த வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ அவர்கள் தன் பேச்சுத்திறமையை வெளிக்கொண்டு  வந்த  நாளிலிருந்து  எந்த மேடையில் , எந்தக் கோணத்தில் பேசினாலும்தன் இருகண்களின் ஒன்றான தமிழ்த் தெய்வம் முருகனையும் , மற்றொரு கண்ணான ஆசான் மகாமகோபாத்யாய உ.வே. சுவாமிநாதன் அவர்களையும் நினைந்துவிட்டுத்தான் பேச்சைத் தொடங்குவார்.
டாக்டர் உ.வே சுவாமிநாதன் அவர்களுக்கு தலை மாணாக்கராக விளங்கி, தக்கயாகப் பரணி, குறுந்தொகை, தமிழ்விடுதூது, ஆனந்த ருத்ரேச வண்டுவிடுதூது , ஐம்பெரும் காப்பியங்கள் எனப் பல ஏடுகள் சேகரிப்பதற்கும், நூல் ஆராய்ச்சிக்கும் பெரிதும் உதவியிருக்கிறார்.
திரு கி.வா.ஜ அவர்கள் பெரும்பாலும் தன் சிறு வயதை மோகனூரில் கழித்தார். அப்பொழுது பஞ்சாட்சரத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி , அவ்வூர் கோயிலில் வீற்றிருக்கும் தட்சிணா மூர்த்தியின் கையில் கொடுத்து , தட்சிணா மூர்த்தியே உபதேசம் செய்ததாகக் கருதி அதை மீண்டும் அவர் கையிலிருந்து எடுத்துக் கொண்டார். குன்றில் வீற்றிருந்த காந்த மலை முருகன் மேல் வெகுவாகக் காதல் கொண்டிருந்த இவர் , காயத்ரி மந்திரத்தை மட்டுமே சிறுவயதில் இருபத்திநான்கு லட்சம்போல் ஜபித்தாராம். பிரம்பாலான தண்டத்தைத் தன் முன் நிறுத்தி அதில்  முருகனை ஆவாகனம் செய்து  ‘முருகா’ ‘முருகா’ என்று அரற்றி அந்தப் பிரம்பாலேயே தன்னை அடித்துக் கொள்வாராம். அப்படியொரு காதல் முருகன் மேல்.
       ஒரு சமயம் சேந்தமங்கலம் அவதூத ஸ்வாமிகளிடம் சென்று , தன்னைச் சீடனாக ஏற்று சன்னியாசம் வழங்கக்  கோரி,  அவர் மறுத்ததால் , தமிழ் உலகம் பிழைத்தது . தேனாம்பேட்டை ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி ஆலயத்தில் 1956 ஆம் ஆண்டு ஆரம்பித்துத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கந்தர் அலங்கார விரிவுரை ஆற்றினார். காசி மடத்துத் தலைவர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருணந்தி சுவாமிகள்  . கேட்டுக் கொண்டதன் பேரில் ,’அபிராமி அந்தாதி ’ நூலுக்கு உரை எழுதினார் . 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் தேனாம்பேட்டை பாலசுப்ரமண்ய சுவாமி ஆலயத்தில் ‘ கந்தர் அநுபூதி’ விரிவுரை ஆற்றினார். ‘கந்த புராணம் ’ பற்றி தூத்துக்குடியிலும், ‘கந்தர் கலி வெண்பா’ யானைக் கவுளி குமரக் கோட்டத்திலும் , சைவ சமய பக்த ஜன சபையில்                              ‘ ‘திருமுறுகாற்றுப்படை’ பற்றியும் , கந்தசாமி கோயிலில் ‘திருமுருகாற்றுப்படை’ பற்றியும், சொற்பொழிவாற்றினார் . காஞ்சி மகா பெரியவர்கள் தன் ஆசியுடன் இவருக்கு “ திருமுருகாற்றுப்படை அரசு ”   என்ற பட்டம் பொறித்த மோதிரத்தை அனுப்பினார். மேலும் காஞ்சிப்  பெரியவரின்  அன்பான வேண்டுகோளின்படி பற்பல இடங்களில் ‘திருப்பாவை’ , ‘திருவெம்பாவை’ உரையும் ஆற்றியுள்ளார். வானொலியிலும்  அவைகள்  ஒலி பரப்பாகியிருந்தன. திருப்புகலூரில் 1951ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11, 12   தேதிகளில் நடந்த மாநாட்டுக்கு வந்திருந்த காஞ்சிப்  பெரியவர்கள் இவருக்கு ‘வாகீச கலாநிதி ’ என்ற பட்டத்தை வழங்கி அவரே இவருக்குச் சால்வையும் போர்த்தினார் . ‘கந்தர் அலங்காரச் செம்மல் ’ , ‘தமிழ் முனிவர்’, ‘செந்தமிழ்ச் செல்வர் ’ , ‘டாக்டர்’  இன்னும் பல பட்டங்கள் இருப்பினும் திரு கி.வா.ஜ அவர்கள்   ‘ வாகீசகலாநிதி’ என்ற பட்டத்தையே தன் பெயருடன் விரும்பிவைத்துக் கொண்டார் .
      சிருங்கேரி சங்கராச்சாரியார் அவர்கள்,  தமிழ்க்கவி பூஷணம்  என்ற பட்டத்தையும் .புஷ்பகிரி சங்கராச்சாரியார் அவர்கள் ,  ‘உபந்நியாச கேசரி’என்ற பட்டத்தையும் , மதுரை ஞான சம்பந்த மடாதிபதி –“ திருநெறித் தவமணி” என்ற பட்டத்தையும்  இவருக்கு  அளித்தனர்..
1946ஆம் ஆண்டு தன் தாயார் , நோய்வாய்பட்டு இருக்கும் தருணத்தில் , தாயின் பக்கத்திலேயே இருந்து ‘ வழிகாட்டி’ என்ற நூலை எழுதத் தொடங்கினார். அருகிலேயே இருந்துகொண்டு ,  ‘ திருப்புகழ்’ ‘கந்தர் அலங்காரம்’, போன்றவைகளைப் பாடிக்கொண்டிருப்பார். தாயாரின் உடல் நிலை மோசமானபோது இவரை அழைத்துப் பிராயச் சித்தம் செய்யச் சொல்லிய   பின் தாயாரே எழுந்து அந்தணர்களுக்கு தட்சிணை வழங்கினார்கள். தாயாருக்கு  நினைவும் தப்பிவிட்டது. இவர் தன் தாயின் வாயில் கங்கை நீரை விட்டுக் கொண்டே ‘முருகா’முகா’ எனக் கதறினார். தாயின் மூச்சும் நின்றது. இருந்தும் இவர் காலம்  தாழ்த்தாது முருகனை மனதில்  நினைந்து , தாயின் உடலில் திருநீற்றைப் பூசித் திருப்புகழ் பாடல்களைப் பாடிக்கொண்டே இருந்தார்.  எல்லாம் எமனை வெளியேற்றும் பாடல்கள்.   இரண்டு நிமிடங்கள் உயிர்போன அன்னையாரின் உடம்பில் மீண்டும் உயிர் வந்தது. மிக அற்புதமான நிகழ்ச்சி !  திருப்புகழின் பெருமையை என்னென்று உரைப்பது ! . இவ்வாறு முருக பக்தர் , தன் தாயின் இறப்பை ஏழு நாட்கள் தள்ளிப்போட்டார் . எட்டாவது நாள், ஏதோ வேலையாகத்  தன் தாயை விட்டுச் சிறிதே நகர்ந்த போது   யமன் தன் கைவரிசையைக் காட்டினான்.  பின்னர்    ‘ வழிகாட்டி’  நூலை  எழுதி முடித்துத் தன் அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தார். சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தமும் , குமர குருபரஸ்வாமிகள் பிரபந்தமும் கி.வா.ஜ வின் உழைப்பின் உதவி கொண்டு திரு உ.வே.சா அவர்கள் வெளியிட்டார்கள் . அதனை ஐயர் அவர்களே குறிப்பிட்டுள்ளார்.
      இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு சொல்லி முடியாது. ‘கந்தர் அலங்கார விளக்கங்கள்’ , திருமுறை மலர்கள், அபிராமி அந்தாதி விளக்கங்கள் , முருகனைப் பற்றிய கட்டுரைகள் , பதினோராம் திருமுறை , திருவாசகம் , கந்த புராண  விளக்கம் , பெரிய புராண விளக்கங்கள், பழமொழிகள் போன்று இருநூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘வீரர் உலகம்’ என்ற புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி பரிசும் கிடைத்தது.
      எழுத்துலகத்தில் இவர் கொடி கட்டிப் பறந்தது யாவரும் அறிந்ததே !. 1937 ஆம் ஆண்டு கலைமகள் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கி அது இறுதிவரை நீடித்தது. பல நல்ல எழுத்தாளர்களை உருவாக்கியுள்ள  கி.வா.ஜவும் , பல பத்திகைகளுக்கும் , மற்ற புத்தகங்களுக்கும் பற்பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
      1932 ஆம் அண்டு புரட்டாசி மாதம் காஞ்சி மகா பெரியவர்கள் சென்னைக்கு விஜயம் செய்தபோது, கோலாகலமாக அளிக்கப்பட்ட வரவேற்பில் வரவேற்புரை பத்திரம் ஒன்றைப் பாடலாக எழுதி வாசித்தவரும் இவரே . அன்றிலிருந்து காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீமத் சந்திரசேகர சுவாமிகளிடம் எழுந்த பக்தி மேன்மேலும் பெருகி, இருவரும் நண்பர்கள் என்று கூறும்அளவிற்குத் திகழ்ந்தது. முனி புங்கவர்களின் இயல்பை ஒருங்கே தன்னிடத்து வைத்திருந்த  மகாபெரியவரைக் காண அவரது சன்னிதானம் சென்றால் , மெய்சிலிர்த்து நிற்பார் கி.வா.ஜ. மகா பெரியவாளும் இவர்பால் காட்டிய அன்பைக் கண்டவர்களின் உள்ளம் நெகிழ்ந்து போகும்
      அந்நாளில் மைலாப்பூர் சமஸ்கிருத கல்லூரியில் மகாபெரியவர் பேச ஆரம்பித்துவிட்டால் , அன்பர் கி.வா.ஜ அவர்கள் நீளமான நோட்டைத் தம் துடைமீது வைத்துக்கொண்டு பெரியவரின் உபந்நியாசத்தை ஒரு  வார்த்தை விடாது வடிவெழுத்திலே எழுதிக் கொண்டு பின் சரி பார்ப்பார். இப்படி இவர் எழுதிய உபந்நியாசங்கள் ‘ நன்மொழிகள்’ என்றும் , ‘சங்கரவிஜயம்’ என்றும் இரண்டு புத்தகங்களாகக் கலைமகள் வெளியீடாக வந்து , ஆறுதொகுதிகளாகி, காமகோடி கோசஸ்தாபன பிரசுரமாக உருப் பெற்று இன்றும் யாவரும் படித்து இன்புற  வலம் வருகின்றது.
      எப்பொழுது மகா பெரியவர்களும் , இவரும் சந்திக்க நேர்ந்தாலும்  , பெரியவா இவரைத் தன் அருகில் அமர்த்தி வைத்துக் கொண்டு , பல சந்தேகங்கள் , பல விளக்கங்கள் என்று  கேட்டு  வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பார். சில இளம் துறவிகள்,  “ இன்ன சந்தேகத்தை நான் மகா பெரியவாளிடம் கேட்டேன் , அவர் ஜகன்னாதனிடம் போய்க்கேள் ,அவன் சொல்வான்  என உங்களிடம் அனுப்பிவைத்தார் ” என்று இவரிடம் வருவார்கள்.
      ஒருமுறை கி.வா.ஜ வீட்டிற்கு எதிரே இருந்த ஒரு மண்டபத்தில் மகா பெரியவர்களுக்குக் கனகாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடாகியிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த மண்டபத்தில் , காலை 10 ½ மணிக்கே பூஜை ஆரம்பித்து , தாரா பாத்திர அபிஷேகமும் முடிந்து, கனகாபிஷேகம் ஆரம்பமாயிற்று. கனகாபிஷேகத்திற்கான பொற்காசுகள் முழுதும் வந்தபாடில்லை. பிற்பகல் ஒரு மணியளவில் இருந்த பொற் காசுகளைக் கொண்டு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் , மகா பெரியவருக்கு கனகாபிஷேகம் செய்தார். பிக்ஷை முடிந்து மணி மூன்றும் ஆயிற்று . அந்தச் சமயம் பார்த்து , மீதமிருந்த எழுபத்தைந்து பொற் காசுகள் வந்து சேர்ந்தன. கி.வா.ஜ அவர்கள் , அக்காசுகளைப் பெரியவர் முன் வைத்து விட்டுப் பணிவாக , “ இப்போதுதான் வந்தது ” என்று சொன்னார். இவரை நிமிர்ந்து பார்த்த காஞ்சி மாமுனிவர்  புன் சிரிப்போடு , “ நீயே அபிஷேகம் செய்து விடு ! ஏகாந்த அபிஷேகமாக இருக்கட்டும் ! ” என்றாரே பார்க்கலாம் . ஆனந்தம் தாங்கமுடியாது பக்திப் பரவசத்துடன் தம் கரங்களால் காஞ்சி பெரியவருக்கு அபிஷேகம் செய்தார் கி.வா.ஜ அவர்கள் .  இதை விட உலகத்தில் வேறு என்ன பேறு வேண்டும்!  
      மகா பெரியவர் திரு கி. வா.ஜ.வை அருகில் இருக்கும் யாருக்கேனும் அறிமுகப் படுத்த வேண்டுமென்றால் புன்னகையுடன் , “இவர் யார் தெரியுமா? கலைமகளுக்கே ஆசிரியர் ! ” என்று கூறிப் பெருமிதம் அடைவார் . அப்பொழுது மகா பெரியவர்களின் கண்களில் மிளிரும்  ஒளி வெகு தூரம் இருக்கும் மக்களையும் வசீகரிக்கும் .
      அதேபோன்று சிருங்கேரி ஆசார்யார் அவர்களும் கி.வா.ஜவிடம்   பெரு மதிப்பு வைத்திருந்தார்.  அவர்கள் சென்னைக்கு   விஜயம் செய்யும் போதெல்லாம் கி.வா.ஜ அவர்கள்தான் வரவேற்புரை கூறும் வழக்கமாகிவிட்டது.
  சிறு வயதில்  துறவு மனப்பான்மை  கொண்ட திரு கி.வா,ஜ , சைவ மடங்களின் தலைவர்களோடு  மட்டுமின்றி ராமகிருஷ்ண மடங்களின் தலைவர்களோடும் பழகி வந்தார்.  சேந்தமங்கலம் ஸ்வாமிகளின் சீடரான துரியானந்தருடனும்  நெருங்கிப் பழகியிருக்கிறார். ரமண பகவானையும் தரிசித்து அவரைப் பற்றிய நூல்களையும்  எழுதியிருக்கிறார். திருவண்ணாமலையில் ‘ கங்கைக்கரையில் முளைத்த கற்பக வ்ருக்ஷம் ’ என இவர் போற்றிய தவயோகி ராம்சூரத் குமாரையும் இவர் தரிசித்து அந்த இடத்திலேயே அவரைப் பற்றிய பாட்டுக்கள் பாடுவது  வழக்கம். அப்படி வந்த புத்தகம் தான் “ அன்புமாலை ” வள்ளிமலை ஸ்வாமிகள் ஸ்ரீ சரவணபவானந்தா , அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார்,  வ.த.சுப்ரமண்ய பிள்ளை , வ.சு.செங்கல்வராய பிள்ளை,வடகுமரை அப்பண்ண ஸ்வாமிகள் போன்றவரின் நட்பையும் பெற்றிருந்தார் திருகி.வா.ஜ அவர்கள்
முப்பத்துஆறு முறை இலங்கை சென்று பல ஆன்மீகச் சொற்பொழிவுகளை ஆற்றிய திரு கி.வா.ஜ அவர்களுக்கு  இலங்கைப் பெருமக்கள் இவரிடம் வைத்திருந்த  நன் மதிப்பு காரணமாக    கி.வா.ஜவின் மணிவிழாவையும் கொண்டாடினார்கள்  என்பதில் ஒன்றும் வியப்பில்லை  .பாரிஸ் , லண்டன்  , பர்மா, சிங்கப்பூர் , மலேஷியா போன்ற இடங்களுக்கும் சென்று சொற்பொழிவாற்றியிருக்கிறார் ஆனால் எங்கே சென்றாலும் அவருடைய நிலையிலிருந்து மாறமாட்டார். கதர் வேட்டி, ஜிப்பா, கதர் அங்கவஸ்திரம், தலையில் சிறு குடுமி, நெற்றியில் விபூதிப்பட்டை.
      ஆன்மீகவாதி , சொற்பொழிவாளர், எழுத்தாளர், இலக்கிய மேடைப் பேச்சாளர் , கும்பம் , ஜோதி, அனுஷம் , விடையவன் என்ற பல புனைப் பெயர்களைக் கொண்டவர் என்று  விளங்கிய  திரு கி.வா.ஜ அவர்களுக்கு சிலேடை மன்னன் என்ற பட்டமும் உண்டு.
      கி.வா.ஜ சிலேடையில் ஒன்று :-  
 தூத்துக்குடியில்   இருபது நாள்  இவர் கந்தபுராணச் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த பொழுது , வ.வு.சி கல்லூரிப்  பேராசிரியர் ஒருவர் திருச்சி , மதுரை நகரங்களை எல்லாம் சுற்றிவிட்டு இவரைப்பார்க்க வந்தார் .
“ அந்த ஊர்களிலெல்லாம் வெய்யில் எப்படி இருக்கிறது ? ”என்று கேட்டார் இவர்.
அதற்குப் பேராசிரியர்  , “ திருச்சியை விட மதுரையில் இரண்டு டிகிரி கூடவே இருந்தது ” என  பதிலளித்தார்
உடனே கி.வா.ஜவும் தயங்காது  ,  “மதுரையில் பல்கலைக் கழகம் இருக்கிறதல்லவா? ” என்றார்   ( டிகிரி )
இப்படிப் பல சிலேடைகளை அனாயாசமாக வழங்குவதில் வல்லவராகவும், பல துறைகளில்  மன்னனாகத்  திகழ்ந்தவருமான
 வாகீசகலாநிதி    திரு கி.வா.ஜ அவர்கள்
 பிறப்பு          11 – 4- 1906  ----
 அமரத்துவம்     4 – 11- 1988  ---      விந்தைதான் !




3 கருத்துகள்:

  1. திருமுருகாற்றுப்படை நூலுக்கு சரியான உரையைத் தேடிக் கொண்டு இருந்த போது கி வா ஜ அவர்கள் ஆற்றுப் படுத்துதல் என்ற பொருள் படும் படியாக திருமுருகாற்றுப்படைக்கு வழிகாட்டி என்ற பெயரில் ஒரு உரையை எழுதிய செய்தி கிட்டியது. இந்தப் பதிவில் ஐயர் அவர்கள் தன் அன்னையாரின் இறுதிக் காலத்தில் அன்னாருக்கு சிசுருட்சை செய்து வந்த காலத்தில் இந்த நூலை யாத்தனர் என்ற செய்தி அறிந்து இன்புற்றேன்.

    பதிலளிநீக்கு