வியாழன், 5 மார்ச், 2015

அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளில் அரசியலிலிருந்து , கீழ் மக்கள்வரை ஏராளமான வேடிக்கைகள் நடக்கின்றன.வாகீச கலாநிதி திரு கி.வா.ஜகன்னாதன் அவர்கள் எப்போதும் நண்பர்களுடனோ ,மேடையிலோ பேசும்போது, சமய சந்தர்ப்பத்திற்கு  ஏற்றாற்போல் இரு பொருள்பட பல துணுக்குகள் சொல்லிய துண்டு.  இவை பெரும்பாலும் பல பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளன. .இவற்றை சிலேடை என்பார்கள். ஆசுகவி கி.வா.ஜ அவர்களை சிலேடை மன்னன் என்றே கூறலாம்  அந்த மன்னன்   கூறிய சிலேடைகளை  எத்தனை முறை கேட்டாலும் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுகிறது . இதோ அவற்றில் சில .--------
      ஒரு முறை சொற்பொழிவாற்றுவதற்காக  ஒரு ஊருக்கு இரவில் இரயில்  பயணம் செய்தார் .காலை வந்ததும் ,இறங்கும் ஊர் வந்ததால் அவர்  கீழே இறங்கினார் . பலர் ஸ்டேஷனுக்கே வந்து அவரை வரவேற்று மாலை அணிவித்தனர்.
“ காலையிலேயே மாலை வந்தது “ என்றாரே பார்க்கலாம்
( மாலை-பூ மாலை , மாலை – சாயும் காலம் )
 ஒரு முறை ஒரு ஊரில் புலவர் மாநாட்டு விழா சிறப்பாக நடக்கவிருந்தது. கி.வா.ஜ அவர்கள் அங்கு பங்கேற்றார். ஆனால் விழாவைத் தொடங்கி வைப்பவர் அன்று வரவில்லை ஆதலால் செயலாளர் யாவரையும் வரவேற்றுவிட்டு ,” எல்லோருக்கும் வணக்கம் விழாவைத் தொடங்கி வைப்பவர் வராததால் . கவிஞர் வாலி ஆரம்பித்துவைப்பார் “ என்றார்.
இவர் உடனே எழுந்து ,” நல்லதுதான் , அவருக்கு உகந்த செயல்தான். வரவேற்கிறேன்” என்றார்.
ஒருவருக்கும் அவர் சொன்னது புரியவில்லை . உடனே எழுந்து , வாலி ஆரம் பித்து வைப்பது சரிதானே ! “ என்று இரு பொருள் படக் கூறினார்.
 ( வாலி –குரங்கு ஆரம் – பூமாலை பித்து—பிய்ப்பது )
வேறொரு இடத்தில் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கச்  சென்றார் திரு கி.வா.ஜ அவர்கள். அப்போது கவி பாடிய கவிஞர்களுக்கு மாலை அணிவிக்காமல் மேலாடை போர்த்தினர் . சபையில் இருந்த ஒருவர் ,” யாவருக்கும் மாலை போடவில்லையா?” என்று கேட்டார்.
“கவிக்கு மாலை போட்டால் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியாதா?” பழமொழியைக் கேட்டதில்லையா?  “ என்று சாதுர்யமாக இவர் பதில் சொன்னார்.
( குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல என்பது பழமொழி. கவி-கவிஞர், குரங்கு)
சைவராகிய திரு கி.வா.ஜ அவர்கள் சைவ , வைணவ சொற்பொழிவாற்றுவதில் வல்லவர். ஒரு சமயம் திருமால் பற்றிச் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவு முடிந்தவுடன் , நீண்ட மாலை போட்டனர் , அது அவர் முழங்கால்வரை தொங்கியது
“ நான் சைவனாக இருந்தாலும் திருமாலைப்பற்றி எவ்வளவோ இடங்களில் சொற்பொழிவாற்றியிருக்கிறேன் .  இருந்தாலும் இன்று நான் பெரும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இன்று தான் நெடுமாலைக் கண்டேன் ‘ என்றார். 
( நெடுமால் – திருமால் , பெரியமாலை)
தன்னுடைய பெயரை எப்பொழுதும் ஜகன்னாதன் என்றுதான் எழுத வேண்டும் என்பார் . ஜெகன்னாதன் என்று யாராவது எழுதினால் தன் தலையைக் காட்டி ,” எனக்கு ஏதேனும் கொம்பு முளைத்திருக்கிறதா பாருங்கள் ! “ என்பார்
( கொம்பு –தலையில் வளர்வது , கொம்பெழுத்து ஜெ )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக